கொடைக்கானல் வடகவுஞ்சி பகுதியில் விவசாய நிலங்களை வன விலங்குகளிடமிருந்து பாதுகாக்கவும், பட்டா நிலங்களில் வனத்துறை அத்துமீறல்களை தடுக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லையா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமசாமி, மாவட்ட தலைவர் பெருமாள், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் அஜய் கோஸ் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம் கலந்து கொண்டு கோரிக்கை விளக்கஉரை நிகழ்த்தினார்.
ஆர்ப்பாட்டத்தில், கொடைக்கானல் தாலுகா வடகவுஞ்சிக் கிராமத்தின் எல்லையோர வருவாய் துறை நிலங்களில், விவசாயம் செய்து வரும் விடுபட்ட விவசாயிகளுக்கு வன உரிமை சட்டப்படி பட்டா கொடுக்க வேண்டும்.
ஆயக்குடி, கணக்கன்பட்டி, பச்சிளநாயக்கன்பட்டி, கோம்பைப்பட்டி ஆகிய விவசாய நிலங்களை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பட்டா நிலங்களில் வனத்துறை அத்துமீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும், யானைகளை சரணாலயத்திற்கு கொண்டு செல்ல, நடவடிக்கை எடுக்க வேண்டும். உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டத்தில், பழனி ஒன்றிய தலைவர் சின்னச்சாமி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கமலக்கண்ணன் உட்பட 200க்கு மேற்பட்ட விவசாயிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு கலெக்டர் சரவணனிடம் மனு அளித்தனர்.