• Thu. Dec 4th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தீபம் ஏற்றாததை கண்டித்து முற்றுகை போராட்டம்..,

ByKalamegam Viswanathan

Dec 4, 2025

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் எனவும், அதற்கான பாதுகாப்பை காவல்துறையினர் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி சி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் ஆண்டுதோறும் தீபம் ஏற்றும் பகுதியான திருப்பரங்குன்றம் கோவில் மலை மேல் உள்ள உச்சி பிள்ளையார் கோவில் அருகே உள்ள பகுதியில் தீபம் ஏற்றப்பட்டது

ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியில் தீப தூணில் தீபம் ஏற்றவில்லை இதையடுத்து தீபத்தூணில் தீபம் ஏற்றாததை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் கோவில் மற்றும் திருப்பரங்குன்றம் மலையை நோக்கி சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

அப்போது பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட தடுப்புகளை உடைத்து முன்னேறி சென்றபோது காவல்துறையினருடன் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மேலும் மலை மீது ஏற முயன்ற போது தடுப்புகளை உடைத்து இந்து முன்னணி அமைப்பினர் சென்றபோது பாதுகாப்பு பணியில் இருந்த இரண்டு காவலர்களுக்கு காயம் ஏற்பட்டது.

இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீபத்தூணில் மனுதாரர் 6 நபர்களுடன் சென்று தீபம் ஏற்றலாம் எனவும் அதற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் பகுதியில் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.

இதனிடையே உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மனுதாரர்களுடன் தீபத்தூணிற்கு சென்று தீபம் ஏற்றுவதற்கு பாதுகாப்பிற்காக 62 CISF படையினர் மலைப்பாதை பகுதிக்கு வருகை தந்தனர்

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மாநகர காவல் ஆணையர் லோகநாதன் CISF படையினர் மலை மேல் செல்வதற்கு அனுமதி இல்லை என கூறியதால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது

பின்னர் சென்னை உயர் நீதிமன்ற அமர்வு நிர்வாக நீதிபதியிடம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு முறையீடு செய்யப்பட்டதால் இன்று காலை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கூறியதையடுத்து தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்காக பாதுகாப்பு பணிக்காக வந்த CISF படையினர் மீண்டும் திரும்பிச் சென்றனர்

இதையடுத்து திருப்பரங்குன்றம் மலைப்பாதை முன்பாக அமர்ந்து இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் தீபத்தூணில் தீபம் ஏற்ற கூறி போராட்டம் நடத்தினர்

முன்னதாக திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் பகுதியில் பாஜக நிர்வாகி சூர்யா தலைமையில் கையில் வேலுடன் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செல்வதற்காக சென்றனர்

அப்போது காவல்துறையினர் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதையடுத்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது பாஜக நிர்வாகி SG சூர்யா மயங்கிவிழுந்த நிலையில் தண்ணீர் தெளித்து அழைத்துசென்றனர்.

பாஜகவினரின் போராட்டம் காரணமாக 16 கால் மண்டபத்திற்கு முன்பாக நடைபெறும் சொக்கப்பனை நிகழ்விற்கு சுவாமி உலா வருகை சிறிதுநேரம் தாமதமானது.

பின்னர் 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில் சொக்கப்பனை நிகழ்வு முடிவடைந்து தாமதமான நிலையில் சுவாமி வீதி உலா ரத வீதி வழியாக செல்லாமல் சன்னதி தெரு வழியாக சுவாமி சன்னதி வழியாக மீண்டும் கோவிலுக்கு சென்றடைந்தது.