

கடுமையாக உயரும் கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்து, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கூட்டமைப்பினர் அறிவித்து, வேலை நிறுத்த போராட்டத்தையும் தொடங்கினர்.
கட்டுமான தொழிலுக்கு பயன்படும் பி சாண்ட், எம் சாண்ட், ஜல்லி, அரளை உள்ளிட்ட பொருட்களின் கடுமையான விலையேற்றத்தை கண்டித்து கட்டுமான பொறியாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. அதன்படி ஒப்பந்தக்காரர்கள், பொறியாளர்கள், லாரி உரிமையாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் ஆலோசனை கூட்டம் இன்று நாகையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கட்டுமான பொருட்கள் விலையேற்றதிற்கு காரணமான கிரஷர் கம்பெனிகளை கண்டித்தும் , தமிழக அரசு விலையேற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தும் வகையில் கோரிக்கைகள் முன்வைத்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனை கூட்டத்தில் நாளைய மறுதினம் புதன் கிழமை நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். ஜல்லி, உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை இரண்டாயிரம் ரூபாய் அதிகமாக விற்பனை செய்வதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தனர். இந்த நிலையில் நாளை வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட இருப்பதால் நாகை மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகள் நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

