மதுரை மாநகராட்சி ₹150 கோடி மதிப்பிலான சொத்துவரி முறைகேடு விவகாரத்தில், தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றி வந்த உதவி ஆணையர் சுரேஷ்குமார், மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில், முன்னதாக ஓய்வுபெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன், சொத்துவரி விதிப்பு குழுத் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டு, 19 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர். மேலும் 5 மண்டலத் தலைவர்கள், 2 நிலைக்குழுத் தலைவர்கள் ராஜினாமா செய்தனர்.
உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், டிஐஜி அபினவ்குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு செயல்பட்டு வரும் நிலையில், சொத்துவரி விதிப்பு குழுத் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் அளித்த வாக்குமூலத்தில் மாநகராட்சியின் முக்கிய அதிகார மையங்களைச் சேர்ந்த 2 பேர், 3 கவுன்சிலர்கள், ஒரு மண்டலத் தலைவரின் கணவர், அன்றைய காலகட்டத்தில் பணியாற்றிய உதவி ஆணையர்கள் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் வழக்கில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.