• Thu. May 2nd, 2024

தமிழகத்தில் வாகனங்களுக்கான வரி உயர்வு அரசாணை வெளியீடு..!

Byவிஷா

Nov 9, 2023
2 மற்றும் 4 சக்கர வாகனங்கள், ஆம்னி பேருந்துகள், சரக்கு வாகனங்கள் என அனைத்து வாகனங்களுக்குமான வரி உயருகிறது.
மோட்டார் வாகனங்களுக்கான தமிழக அரசின் திருத்தப்பட்ட வரி குறித்தான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, வாடகை பயணிகள் போக்குவரத்து வாகனங்களில், சுற்றுலா மற்றும் ஒப்பந்த வாகனங்களுக்கு காலாண்டு வரி ரூ.4,900-ஆகவும், 35 பேருக்கு மேல் பயணித்தால் இருக்கைக்கு ரூ.3 ஆயிரமும், படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையிலும் வரி உயர்கிறது.
சென்னை, மதுரை, கோவை நகர சுற்றுப்பகுதிகளில் இயக்க அனுமதிக்கப்பட்ட பிரத்யேக பேருந்துகளுக்கு மேல்வரி விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்து, வாடகை வாகனங்களுக்கு 5 ஆண்டு வரியாக ரூ.1,400 முதல் ரூ.6,000 வரை பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் வரி உயர்த்தப்படுகிறது.
புதிய பைக்குகளுக்கான வாழ்நாள் வரி, ரூ.1 லட்சம் வரை 10 சதவீதம், ரூ.1 லட்சத்துக்கு மேல் இருந்தால் 12 சதவீதமும், பழைய பைக்குகளுக்கு, ஒருவருட பழையதெனில் ரூ.1 லட்சம் வரை விலைக்கு 8.25 சதவீதமும், அதற்கு மேல் 10.25 சதவீதமும், 2 ஆண்டு வரை பழைமையானதாக இருந்தால் ரூ.1 லட்சத்துக்கு 8 சதவீதம், அதற்கு மேல் 10 சதவீதம் என வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, 15 ஆண்டுகள் நிறைவடையாத இருசக்கர வாகனங்களுக்கு, 5 ஆண்டுகளுக்கான பசுமை வரி ரூ.750, மற்ற மோட்டார் வாகனங்களுக்கு ரூ.1,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு வரி இருசக்கர வாகனங்களுக்கு ரூ.375, இலகுரக வாகனங்களுக்கு ரூ.2,250, மற்ற வாகனங்களுக்கு ரூ.3 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *