• Wed. Jun 26th, 2024

ஜூன் 20ல் பிரதமர் மோடி சென்னை வருகை

Byவிஷா

Jun 15, 2024

மூன்றாவது முறையாக நரேந்திரமோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு, வருகிற ஜூன் 20ஆம் தேதி முதல் முறையாக சென்னை வருகை தருகிறார்.
பிரதமராக 3வது முறை பதவியேற்றபிறகு முதல்முறையாக வரும் 20ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி, சென்னை எழும்பூர் – நாகர்கோயில் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைக்க உள்ளார். மேலும் ரயில்வே சார்ந்த பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் ஏற்கனவே 6 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை – கோவை, சென்னை- நெல்லை, சென்னை – மைசூர், கோவை- பெங்களூர், சென்னை- விஜயவாடா உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன.
மேலும், சென்னை எழும்பூர் – நாகர்கோயில் இடையே வாராந்திர வந்தே பாரத் ரயில் சேவையும் இயக்கப்படுகிறது. ஆனால் சென்னை எழும்பூர்-நாகர்கோயில் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை தினசரி ரயில் சேவையாக இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.இதையடுத்து, தெற்கு ரயில்வே நிர்வாகம், ரயில்வே வாரியத்திடம் இதுகுறித்து பரிந்துரை செய்தது. பரிந்துரையின் அடிப்படையில், சென்னை எழும்பூர் – நாகர்கோயில் இடையே தினசரி வந்தே பாரத் ரயில் சேவையை இயக்க அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் இந்த ரயில் சேவையை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வரும் 20-ம் தேதி சென்னை வருகிறார். பிரதமர் வருகையையொட்டி, ரயில்வே அதிகாரிகள் அதற்கான முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *