டெல்லியில் புதியதாக கட்டப்பட்டுள்ள விஸ்டா நாடாளுமன்றக் கட்டிடத்தை மே 28ஆம் தேதியன்று, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.
தற்போது டில்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம் சுமார் 96 ஆண்டுகள் பழமையானது. கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த கட்டிடத்தை இடிக்காமல் பழைய கட்டிடத்தை ஒட்டி 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கின. இந்தப் பணிகள் 2021, 2022-ம் ஆண்டு கொரோனா காலத்திலும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. சுமார் ரூ. 20,000 கோடி மதிப்பிலான சென்ட்ரல் விஸ்டா கட்டிடப் பணிகள் கடந்த நவம்பர் மாதம் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டு பல்வேறு காரணங்களால் தாமதமாகிவிட்டது. இப்போது பணிகள் முடிந்த நிலையில், வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். திறப்பு விழா அழைப்பிதழை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பிரதமர் மோடியைச் சந்தித்து, முறைப்படி வழங்கினார்.