பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுப்பதற்கு இந்தியாவும் போராடிக் கொண்டிருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தின நிகழ்ச்சி இலங்கை கொட்டகலை சி.எல்.எவ்.வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டைமான், தலைவர் செந்தில் தொண்டைமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, `சஞ்சீவி மலையை அனுமான் சுமந்தது போன்று இலங்கை பொருளாதார நெருக்கடியை சுமப்பதற்கு பிரதமர் மோடி தயாராக இருக்கிறார். இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நீண்ட காலத்துக்கானது அல்ல’ என்று தெரிவித்தார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தின நிகழ்வு இன்று கொட்டகலை சி.எல்.எவ்.வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், “இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பது சாதாரணக் கட்சி கிடையாது. ஆரம்பிக்கப்பட்ட அடையாளத்தை இன்னும் அக்கட்சி மறக்கவில்லை. தொழிலாளர்களை மையப்படுத்தியே அது பயணிக்கின்றது. சௌமியமூர்த்தி தொண்டமான், இலங்கையர்களுக்கு மட்டும் அல்ல… தமிழ்நாட்டில் இருந்த தமிழர்களுக்கும் வழிகாட்டியாக இருந்துள்ளார். குரல் அற்றவர்களின் குரலாக ஓங்கி ஒலித்துள்ளார்.
1947 இல் நடைபெற்ற தேர்தலில் 8 மலையக பிரதிநிதிகள் நாடாளுமன்றம் சென்றனர். அதன்பின்னர் குடியுரிமை மற்றும் ஏனைய உரிமைகள் பறிக்கப்பட்டன. அவற்றை மீட்டெடுப்பதற்கு தொண்டைமான் பாடுபட்டார். வெற்றியும் கண்டார். தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தார். அமரர் ஆறுமுகன் தொண்டமானும் மக்களுக்காகவே அரசியல் செய்துள்ளார். தனது மக்களின் நில உரிமைக்காக போராடியுள்ளார். பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின்கீழ் முழு உலகமும் இந்தியாவை திருப்பி பார்க்கின்றது. இந்தியா என்பது வல்லரசு நாடாக மாறியுள்ளது. உலகில் 5ஆவது மிகப்பெரிய பொருளாதார பலமுடைய நாடாக மாறியுள்ளது. ரஷ்யா, உக்ரைனுக்கிடையில் மோதல் ஏற்பட்டபோதுகூட, உக்ரைனில் வாழ்ந்த இந்தியர்களை சிறு காயமின்றி மீட்டெடுத்தார்
இலங்கையை அருகிலுள்ள நாடு, எமது சொந்தங்கள் வாழும் நாடு என இரு கோணத்தில் இந்தியா பார்க்கின்றது. அதனால்தான் நெருக்கடியான கட்டங்களில் உதவிகள் வழங்கப்படுகின்றன. உயிர் காப்பு மருந்து தேவை என்று சொன்னபோது, 107 வகையான 760 கிலோ மருந்துகளை அனுப்பி வைத்துள்ளோம். எதிர்காலத்திலும் உதவுவோம். மலையக மக்களுக்கான உதவிகளும் தொடரும். நாம் வளரும் அதேவேளை, எமது தொப்புள்கொடி உறவுகளையும் வளர வைப்போம். மலையகம் கல்வியால் உயர வேண்டும். அதற்கான உதவிகளும் தொடரும்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, நீண்டகாலத்துக்கானது அல்ல. விரைவில் நிலைமை மாற வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன். இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு இந்தியாவும் போராடிக்கொண்டிருக்கின்றது. அன்று அனுமான் எப்படி சஞ்சீவ மலையை சுமந்தாரோ, அதுபோலவே இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமப்பதற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடியும் தயாராகவே இருக்கின்றார்” – என்றார்.
இ.தொ.கா பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் மற்றும் இ.தொ.காவின் தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் எம்.பி, இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான், கட்சியின் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினா்கள், பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆரம்பகால தொழிற்சங்கவாதியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர்.கே.ராஜலிங்கத்தின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. பின்னர், மேதினத்தில் கலந்து கொண்ட தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது. அத்தோடு, தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு புலமைபரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, மூத்த தலைவர், தலைவிமார்களுக்கு கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஓரணியில் திரள்வோம், ஒற்றுமையாக இருப்போம், உரிமைகளை வெல்வோம். மீண்டெழுவோம்' என அறைகூவல் விடுத்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான்,
நாய்கள் குரைக்கும்போது சிங்கங்கள் அஞ்சுவது கிடையாது’ எனவும் சூளுரைத்தார். தொடர்ந்து `இ.தொ.கா என்பது மக்கள் இயக்கம். மக்களை பாதுகாத்த அரசியல் இயக்கம். மக்களுக்கு உரிமைகளை வென்றுக்கொடுத்த அரசியல் கட்சி. எமது மக்களுக்கு நில உரிமை வேண்டும். 150 வருடங்களாக நிலமற்றவர்களாக நாம் வாழ்கின்றோம். இதனை பெற்றுக்கொடுப்பதற்கு இந்தியாவின் உதவியும் அவசியம். அதற்கான உறவு பாலமாக அண்ணாமலை இருப்பார்’ என நம்புகின்றேன் என்றார்.