நாட்டில் உள்ள முன்னணி விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் கலந்து கொள்ளும் இந்திய அறிவியல் மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக இந்த மாநாடு நடைபெறவில்லை.
இந்நிலையில் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே 108-வது இந்திய அறிவியல் மாநாட்டை இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியானது ராஷ்டிரசந்த் துகாடோஜி மகராஜ் நாக்பூர் பல்கலை கழகத்தின் அமராவதி சாலை வளாகத்தில் தொடங்குகிறது. இந்நிகழ்ச்சியில் மராட்டிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் பட்னாவிஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. இந்திய அறிவியல் மாநாட்டின் இந்த ஆண்டிற்கான மைய பொருளாக, மகளிருக்கு அதிகாரமளித்தலுடன் கூடிய நீடித்த வளர்ச்சிக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்பது இருக்கும். இந்த மாநாட்டில் நீடித்த வளர்ச்சி, மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் அவற்றை அடைவதற்கான அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் பங்கு ஆகிய விவகாரங்கள் பற்றி ஆலோசிக்கப்படும். இதில் பங்கு பெறுவோர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில் துறையில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வழிகள் பற்றி விவாதிப்பார்கள்.