பாராசிட்டமால் உட்பட 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் அண்மைக்காலமாக பாராசிட்டமால் விற்பனை திடீரென பெரும் வளர்ச்சி அடைந்தது. அதாவது கொரோனா மூன்றாம் அலையில் இந்தியர்கள் அதிகம் எடுத்தது பாராசிட்டமால் மாத்திரைகள்தான். சமீபமாக பாராசிட்டமால் மாத்திரைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. லேசான கொரோனா தொற்றுக்கு பாராசிட்டமால் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம் என்று அரசின் வழிகாட்டு நெறிமுறைகளிலும் கொடுக்கப்பட்டுள்ளதும் ஒரு காரணம்.
இந்த நிலையில், இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் பாராசிட்டமால் உட்பட 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை வரும் ஏப்ரல் முதல் 10.7% வரை உயர்த்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது, பெரும்பாலான பொதுவான நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியலில் கிட்டத்தட்ட 800 திட்டமிடப்பட்ட மருந்துகளின் விலை ஏப்ரல் 1 முதல் 10.7 சதவீதம் வரை உயரும்.
பொருளாதார, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் அலுவலகம் வழங்கிய தரவுகளின் அடிப்படையில் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் 2020 ஆம் ஆண்டு செய்யப்பட்டதைப் போல, இந்தாண்டும் 10.7% விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் காய்ச்சல், தொற்று, இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், தோல் நோய்கள், ரத்த சோகை போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலை உயரும். இதில் பாராசிட்டமால், ஃபெனோபார்பிடோன், ஃபெனிடோயின் சோடியம், அசித்ரோமைசின், சிப்ரோஃப்ளோக்சசின் ஹைட்ரோகுளோரைடு மற்றும் மெட்ரானிடசோல் போன்ற மருந்துகள் அடங்கும். மருந்துகள் (விலை கட்டுப்பாடு) ஆணை, 2013 இன் விதிகளின்படி இந்த விலை உயர்வு அறிவிப்பை இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ளது.