ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படம் முன்னதாக மார்ச் 18ம் தேதியில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதே தேதியிலேயே பிரபாஸின் ராதே ஷ்யாம் படம் மோதும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராஜமெளலியின் படம் மார்ச் 25ம் தேதிக்கு சென்ற நிலையில், ராதே ஷ்யாம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பிப்ரவரி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அஜித் குமாரின் வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ம் தேதி வெளியாக உள்ள நிலையில், வலிமையுடன் மோதல் வேண்டாம் என நினைத்த சன் பிக்சர்ஸ் மார்ச் 10ம் தேதிக்கு எதற்கும் துணிந்தவன் ரிலீஸை அறிவித்துள்ளது!
இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள ராதே ஷ்யாம் திரைப்படம், ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்துடன் மோதும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த மோதல் தவிர்க்கப்பட்டுள்ளது. இரண்டு படங்களுக்கும் இடையே இரண்டு வார இடைவெளி உள்ளது தெலுங்கு சினிமா துறைக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக மாறி உள்ளது.
காதலுக்கும் ஜாதகத்துக்கும் இடையே நடக்கும் பிரம்மாண்ட போராட்டத்தை சொல்லும் படமாக உருவாகி இருக்கும் பிரபாஸின் ராதே ஷ்யாம் திரைப்படம் வரும் மார்ச் 11ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பான் இந்திய திரைப்படமாக பல்வேறு மொழிகளில் வெளியாகிறது.
இந்த மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை தமிழ்ப் படங்களுக்கும் தெலுங்கு படங்களுக்கும் இடையே கடும் பாக்ஸ் ஆபிஸ் கிளாஷ் நடக்கப் போகிறது. இந்தி படங்கள் தற்போது பின்தங்கியுள்ள நிலையில், இந்திய சினிமாவை ஆட்கொள்ளும் முயற்சியில், டோலிவுட்டும் கோலிவுட்டும் கடுமையாக முயற்சித்து வருகிறது! இந்நிலையில், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்துடன் பிரபாஸின் ராதே ஷ்யாம் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.