• Fri. Mar 29th, 2024

20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு..

Byகாயத்ரி

Dec 23, 2021

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு மற்றும் முழு கரும்பை ஒரே தவணையில் வழங்க வேண்டும் என்றும், பொருட்கள் இல்லை என திருப்பியனுப்பக்கூடாது எனவும் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் கரும்பு ஆகியவை அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது.இப்பொருட்களை நியாயவிலைக்கடைகள் மூலம் விநியோகிக்க, மாவட்ட ஆட்சியர் தலைமையில், சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், மாவட்ட வேளாண்துறை இணை இயக்குனர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இத்தொகுப்பில் உள்ள 20 பொருட்களில் முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு ஆகியவை மட்டும் கூட்டுறவு சங்கங்களின் மூலம் கொள்முதல் செய்து விநியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தகுதியுள்ள குடும்ப அட்டைகளின் பட்டியலை பெற்று பச்சரிசி, சர்க்கரை மற்றும் துணிப்பை ஆகியவற்றை தமிழக நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் இருந்து பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றை பிளாஸ்டிக் உறைகளுக்கு பதில், பழுப்பு நிற காகித உறைகளில் மட்டுமே பொட்டலமிட்டு, விநியே்ாகிக்க வேண்டும் என்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டிய நாட்கள் குறித்த விவரம் வெளியிடப்பட்டதும் அன்றில் இருந்து அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் விநியோகிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பை ஒரே தவணையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியே்ாகிக்க வேண்டும் என்றும் எக்காரணத்தை கொண்டும் பொருட்கள் இல்லை என அட்டைதாரர்களை திருப்பியனுப்பக்கூடாது எனவும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கும் நாட்களில் கடைகளை உரிய நேரத்தில் திறக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து உடன் உரிய பொருட்களை வழங்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *