ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சத்தை இழந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மேல துலுக்கன் குளம் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து (29). கோவை நகர ஆயுதப் படையில் காவலராக பணிபுரிந்து வந்தார்.
கோவை காந்திபுரம் அரசு பொருட்காட்சியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டு இருந்த காவல் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காளிமுத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். துப்பாக்கி குண்டு அவரது வலது பக்க வயிற்றில் துளைத்து பின் வழியாக வெளியேறியது. அவர் ரத்தவெள்ளத்தில் கிடந்தார்.
போலீஸ் விசாரணையில், காளிமுத்து ஆன்லைனில் ரம்மி சூதாட்டம் ஆடியுள்ளார். ஆரம்பத்தில் சிறிதளவு பணத்தை இழந்த அவர், அதை விளையாடி மீட்டு விடலாம் என்று தொடர்ந்து விளையாடி உள்ளார்.
இதற்காக தனது நண்பர்களிடம் ரூ.20 லட்சம் கடன் வாங்கி, பணத்தை இழந்துள்ளார். கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.