

அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, சென்னை பெருநகர காவல்துறை சார்பாக, அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வருகின்ற காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை அதிகாலை அனுமதிக்கப்பட்டார். நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியை ஜூன் மாதம் 28ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நேற்று உத்தரவு பிறப்பித்தார் இந்த உத்தரவின் அடிப்படையில், மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிறைத்துறை கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் இருக்கிறார்.
அதோடு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், செந்தில் பாலாஜி நேற்று இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கின்ற காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதற்கு நடுவே செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் நுங்கம்பாக்கம் பகுதியில் இருக்கின்ற சாஸ்திரி பவனில் செயல்பட்டு வரும் அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு சென்னை பெருநகர காவல் துறையினர் சார்பாக காவல் துறை பாதுகாப்பு இன்று வழங்கப்பட்டிருக்கிறது.
அங்கே சந்தேகத்திற்குரிய வகையில், சுற்றி திரிந்த நபர்களையும் காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிலைமை சீராகும் வரையில் இந்த பாதுகாப்பு தொடரும் என்று காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
