• Wed. May 15th, 2024

வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நிலத்தை மீட்டுத்தர காவல்துறை மறுக்கிறது.., விவசாயிகள் குற்றச்சாட்டு…

ByNamakkal Anjaneyar

Dec 12, 2023

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நாலே முக்கால் ஏக்கர் நிலத்தை மீட்க வலியுறுத்தி விவசாயிகள் திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் நிலத்தை மீட்டுத் தர காவல்துறை மறுக்கிறது என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 50 ஆண்டுகளுக்கு மேலாக திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்திற்கு சொந்தமான நாலே முக்கால் ஏக்கர் நிலம் கைலாசம்பாளையத்தில் உள்ளது அறநிலையத்துறைக்கு சொந்தமாக இருந்த இந்த நிலத்தை பணம் கட்டி திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தினர் வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டு திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு நிலம் சொந்தமானது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த பகுதியில் உள்ள மக்கள் கோயில் நிலம் ஊருக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு பருத்தி மஞ்சள் எள் கொப்பரை தேங்காய் உள்ளிட்ட பல்வேறு தானியங்களை கொண்டுவரும் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை வைப்பதற்காக கிடங்குகள் போதவில்லை என்றும் தனியார் கிடங்கில் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து விளை பொருட்களை வைத்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர். இந்நிலையில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு உரிமையான நிலத்தை மீட்க காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வந்த நிலையில் இன்று விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளரான சுந்தரம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் டி.சி.எம்.எஸ் வாயில் முன் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுந்தரம் கூறும் போது திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் இந்திய அளவில் பிரசித்தி பெற்றது இந்த சங்கத்திற்கு உரிய நிலத்தை மீட்டுக் கொடுக்க காவல்துறை மறுத்து வருகிறது உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் உத்தரவிட்டும் காவல்துறையினர் நிலத்தை மீட்க மறுத்து வருகிறார்கள் எங்களுக்கு நிலத்தை மீட்டு தரும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறினார். திருச்செங்கோடு காவல்துறை கண்காணிப்பாளர் இமயவரம்பன் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கவிதா வட்டாட்சியர் விஜயகாந்த் திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மேலாண்மை இயக்குனர் விஜயசக்தி ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி மூன்று தினங்களுக்குள் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்ததன் பேரில் சுமார் 4 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது போராட்டம் காரணமாக திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *