தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க (தமுஎகச) மாநில துணைத்தலைவரும், பட்டிமன்ற பேச்சாளருமான கவிஞர் நந்தலாலா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
தமுஎகச மாநிலதுணைத்தலைவரும், மிகச்சிறந்த பட்டிமன்ற பேச்சாளருமான கவிஞர் நந்தலாலா உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலக்குழு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,, ‘நந்தலாலா மறைந்தார் எனும் கொடுஞ்செய்தியை ஏற்க முடியாமல் திணறிக்கொடிருக்கிறேன். தமுஎகச மேடையின் தனித்த அடையாளமாக, சமத்துவ கோட்பாட்டின் தன்னிகரற்ற முழக்கமாக இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்த குரல் ஓய்ந்தது. பூவிரியும் காவிரியின் புன்சிரிப்பை, அடர்த்தியும் அழகும் கொண்ட தீந்தமிழின் புதுமொழியை தமிழகத்திற்கு அளித்துச்சென்றுள்ள தோழர் நந்தலாலாவுக்கு வீரவணக்கம்’ எனத் தெரிவித்துள்ளார்.
கவிஞர் நந்தலாலாவின் மறைவிற்கு தமுஎகச மாநில தலைவர் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா உள்பட பல்வேறு தலைவர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.