திண்டுக்கல் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில், வனத்துறை மற்றும் வேளாண்துறை இணைந்து இலவசமாக விவசாயிகளுக்கு மரக்கன்று வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டு இலவச மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிளிக்கையில், திண்டுக்கல் அருகே உள்ள முத்தனம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியின் தாளாளர் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மாணவிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில், கல்லூரியின் தாளாளர் தற்போது வரை தலைமறைவாக உள்ளார் என்ற கேள்விக்கு, கல்லூரியில் படித்து வந்த மாணவிகள் மீது தொடரும் பாலியல் தொல்லை யார் கொடுத்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். பாலியல் சம்பவத்தை யார் செய்திருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யம் பார்க்கப்பட மாட்டாது. கல்லூரியில் படித்து வந்த மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாணவிகளின் கோரிக்கையை கண்டிப்பாக தமிழக அரசு ஏற்று உரிய முறையில் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும். தமிழக முதல்வர் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவிகளுக்கு பாலியல் ரீதியாகவோ அல்லது வேறு ஏதும் தொந்தரவு செய்தால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார் என்றார்.