• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருச்செந்தூரில் அலைகடலென திரண்ட பக்தர்கள்..!

Byவிஷா

Nov 18, 2023

இன்று நடைபெற உள்ள சூரசம்ஹார நிகழ்வை கண்டுகளிக்க திருச்செந்தூரில் பக்தர்கள் அலைகடலென திரண்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள 6 நாட்கள் கடைப்பிடிக்கப்படும் விரதம் கந்தசஷ்டி விரதமாகும். பக்தி சிரத்தையுடன் சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையான கருப்பையில் கரு தங்கும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கையாக இருந்து வருகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் 5ம் படை வீடான திருத்தணியை தவிர மற்ற படை வீடுகளில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
முருகனின் 2வது படை வீடான திருச்செந்தூரில் நவம்பர் 13ம் தேதி திங்கட்கிழமை யாகசாலை பூஜையுடன் இந்த கந்தசஷ்டி விரதம் தொடங்கியது. தினமும் யாகசாலை பூஜை, இறைவனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். சஷ்டி விரதத்தின் 6ம் நாளான இன்று மாலை 4 மணிக்கு ஜெயந்திநாதர் சுவாமி சூரசம்ஹாரத்துக்காக எழுந்தருளுவார். இன்று திருச்செந்தூர் கடற்கரையில் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சூரசம்ஹாரத்தை தொடர்ந்து 7ம் திருநாளன்று மாலை 6.30 மணிக்கு அம்மனுக்கு முருகப்பெருமான் திருக்காட்சி அருளும் நிகழ்வும், தோள் மாலை நிகழ்ச்சியும் நடைபெறும். 20ம் டேதி குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், பூம்பல்லக்கில் தெய்வானை அம்மனும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர்.
நவம்பர் 21,22,23 தேதிகளில் முருகப்பெருமானும் தெய்வானையும் ஊஞ்சல் உற்சவம் நிகழ்வு நடைபெறும்.நவ 24ம் தேதி மாலை மஞ்சள் நீராட்டு விழாவோடு கந்தசஷ்டி திருவிழா இனிதே நிறைவடையும். இன்று நடைபெற உள்ள சூரசம்ஹார நிகழ்வை கண்டுகளிக்க திருச்செந்தூரில் பக்தர்கள் அலைகடலென திரண்டுள்ளனர். விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக கோவிலில் தங்கி விரதம் மேற்கொள்ள 21 இடங்களில் தகரக் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. தகரக்கொட்டகையில் மரப்பலகைகளால் தரைதளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காகக் குளியலறை மற்றும் கழிப்பிட வசதிகள் அனைத்தும் கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளன.