புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கருப்பட்டிப்பட்டி இந்திரா நகர்ப் பகுதியில் பட்டியலின தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்களின் கல்வி நலன் கருதி அரசு சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அப்பள்ளியின் பெயர் பலகையில் பள்ளர் தெரு என சாதியைக் குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே சமத்துவத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், அப்பெயரை உடனடியாக நீக்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதனையடுத்து, நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனத் தலைவர் அண்ணன் பா.ரஞ்சித் மற்றும் பொதுச் செயலாளர் உதயா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, அவ்வமைப்பின் நிர்வாகிகள் முருகானந்தம் தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் மனு அளித்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட கல்வித்துறை மற்றும் ஊராட்சி நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சாதீய அடையாளங்களை பொது இடங்களில் இருந்து அகற்றி, சமூக நல்லிணக்கத்தைப் பேண அரசு உறுதியுடன் செயல்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.




