• Thu. May 2nd, 2024

சோழவந்தான் ரயில்வே கேட் நிரந்தரமாக மூடல் பொதுமக்கள் பாராட்டு

ByN.Ravi

Apr 2, 2024

மதுரை, சோழவந்தானில் ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டதால் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக சோழவந்தான் பேருந்து நிலையம் மற்றும் ரயில்வே மேம்பாலங்கள் பொதுமக்களின் முழு பயன்பாட்டுக்கு வரும் என, நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
சோழவந்தானில் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், ஒரு சில வாகனங்கள் செல்வதற்காக மட்டும் ரயில்வே மேம்பாலம் அதிகாரப்பூர்வமற்ற முறையில் திறக்கப்பட்டு வாகனங்கள் சென்று
வந்தது. மேலும், மேம்பாலத்தில் வாகனங்கள் சென்று வந்தாலும் கீழே உள்ள ரயில்வே கேட்டானது மூடப்படாத நிலையில், ரயில் வரும் நேரம் தவிர மற்ற நேரங்களில் திறந்து வைக்கப்பட்டதால் பொதுமக்கள் ரயில்வே கேட்டை போக்குவரத்திற்கு பயன்படுத்தி வந்தனர். மேலும், ரயில்வே பகுதிக்கு உட்பட்ட மேம்பால பணிகளின் வேலைகள் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் ரயில்வேதுறை அதிகாரிகளின் மனிதாபிமானத்தால், ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடாமல் வைத்திருந்தனர். இதனால், ஆபத்தை உணராமல் பொதுமக்கள் ரயில்வே கேட்டு தாண்டியும் கேட்டு மூடி இருக்கும் நேரம் ரயில்வே கேட்டு பகுதிகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்து வந்தனர். இந்த நிலையில், கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு முன்னறிவிப்பு ஏதுமின்றி ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது. இதனால், இரு சக்கர வாகனம் சைக்கிள் சிறிய கனரக வாகனங்களில் ரயில்வே கேட்டை பயன்படுத்தி வந்தவர்கள் கண்டிப்பான முறையில் ரயில்வே மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில்: ரயில்வே கேட்டை திறந்து வைத்திருந்ததால் ரயில்வே மேம்பாலத்தை அதிகமான மக்கள் பயன்படுத்தாமல் வந்தனர். தற்போது, ரயில்வே கேட்ட நிரந்தரமாக மூடிவிட்டதால் கண்டிப்பான முறையில் ரயில்வே மேம்பாலத்தில் தான் வாகனங்களில் செல்ல முடியும். ஆகையால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனிமேலாவது முடிவு பெறாமல் உள்ள மேம்பால பணிகளை விரைந்து முடிப்பதற்கும் சோழவந்தான் பேருந்து நிலையத்தை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும், கண்டிப்பாக முறையில் நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். ஆகையால், ஒரு வகையில் பார்த்தால் ரயில்வே துறை அதிகாரிகளின் இந்த செயலானது பாராட்டுக்குரியது என்று தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *