• Thu. May 2nd, 2024

உசிலம்பட்டியில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்த எஸ்.பி

Byவிஷா

Apr 3, 2024

ஏப்ரல் 19ஆம் தேதியன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, உசிலம்பட்டி பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்திய திருநாட்டில் வரும் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் சூழலில் வாக்குச்சாவடி மையங்களையும் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து, வாக்குப்பதிவிற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களில் வயது மூத்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னார்வலர்கள் மூலம் சக்கர நாற்காலியில் அழைத்து சென்று வாக்களித்தல் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்றது. மாவட்டத்தில் 13200 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு கணினி மூலம் 2ஆம் கட்ட சுழற்சி முறையில் தொகுதி வாரியாக வாக்குச்சாவடிக்கான தேர்வு நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் மா.சௌ.சங்கீதா, மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் ராஜேஸ்குமார் யாதவ், தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் பொதுப் பார்வையாளர் கௌரங் பாய் மக்வானா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள 322 வாக்குச்சாவடி மையங்களில் சுமார் 90 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்ந் நேரில் ஆய்வு மேற்க்கொண்டார். உசிலம்பட்டி, தொட்டப்பநாயக்கணூர், உத்தப்பநாயக்கணூர் பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்த எஸ்.பி. அரவிந்த் மதுரை மாவட்ட எல்லை பகுதியில் வாகன சோதனை மையங்களையும் நேரில் ஆய்வு செய்து போலீசாருக்கு அறிவுரைகளை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *