விழுப்புரம் அருகே குல்ஃபி ஐஸ் சாப்பிட்ட சிறுவர்கள் உட்பட 85 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் முட்டத்தூர் கிராமத்தில் குல்பி ஐஸ் சாப்பிட்டு 85 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட முட்டத்தூர் கிராமத்தில் ஐஸ் வியாபாரி ஒருவர் ஐஸ் வியாபாரம் செய்துள்ளார். அவரிடம் குல்பி ஐஸ்ஸை அப்பகுதியை சேர்ந்த பள்ளி சிறுவர் சிறுமிகள் உள்பட பலர் வாங்கி சாப்பிட்டனர். ஐஸ் சாப்பிட்ட சிறுவர், சிறுமிகளுக்கு இரவு திடீரென வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அடுத்தடுத்து ஒவ்வொருவராக மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சிறுவர், சிறுமிகள் உள்ளிட்ட 85 பேர் பாதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இருசக்கர வாகனத்தில் தெருத்தெருவாக சென்று குல்பி ஐஸ் விற்பனை செய்த கண்ணன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்த ஐஸ் சோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.