• Sat. May 4th, 2024

திருச்செங்கோடு அருகே திமுக பிரமுகருக்கு சொந்தமான போலி மதுபானங்கள் பறிமுதல்…ஐந்து பேர் கைது!

ByNamakkal Anjaneyar

Apr 3, 2024

திருச்செங்கோடு அருகே 5400 லிட்டர் மதிப்பிலான போலி மதுபானங்கள் திமுக பிரமுகருக்கு சொந்தமான இடத்தில் பறிமுதல் செய்து, ஐந்து பேர் கைது செய்தனர். மது விலக்கு மற்றும் ஆய தீர்வைத் துறையைச் சேர்ந்த மத்திய புலனாய்வுப் பிரிவு (கிரைம் இன்வஸ்டிகேஷன் யூனிஸ், CIU) சேர்ந்த அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

விழுப்புரம் மற்றும் நாமக்கல் இடைப்பட்ட பகுதிகளில் உள்ள சந்து கடைகளில் போலி மதுபானங்கள் அதிக அளவில் விற்கப்படுவதாக எழுந்த தொடர் புகாரை அடுத்து தீவிர சோதனையில் ஈடுபட்ட மத்திய புலனாய்வுத்துறை போலீசார் இன்று
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தேவனாங்குறிச்சி ரோட்டில் உள்ள பனங்காட்டுபாளையம் பகுதியில் திமுக பிரமுகர் ஒன்றிய பெண் கவுன்சிலர் ( மேனகா கார்த்தி) ஒருவருக்கு சொந்தமான இடத்தில் போலி மதுபானம் உற்பத்தி செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து விழுப்புரம் மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடி சோதனை செய்தனர். இதில் ஐந்து பேர் கொண்ட கும்பல் பிடிபட்டது 5400 லிட்டர் ஸ்பிரிட், போலி லேபில்கள் மற்றும் காலி மது பாட்டில்கள், மூடிகள், வெண்ணிலா சுவையூட்டி உள்ளிட்டவை பறிமுதல், இதில் தொடர்புடையவர்கள் யார் எதற்காக எங்கிருந்து கொண்டு வரபட்டது என்பது குறித்து டிஎஸ்பி இமயவரம்பன் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒன்றிய பகுதிகளில் உள்ள 13 அரசு மதுபான கடைகளில் இரவு விற்பனைக்காக இந்த மது பாட்டில்கள் தயாரித்துக் கொண்டு செல்லப்படுவதாகவும் மேலும் பல்வேறு சந்து கடைகளுக்கும் இந்த போலி மதுபானங்கள் விற்பனைக்கு செல்வதாக முதல் கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.

வட்டூர் பெத்தாம் பட்டி பகுதியை சேர்ந்த 6002 என்ற எண் கொண்ட டாஸ்மாக் மதுபானக் கடையில் பார் நடத்தி வரும் மாதேஸ்வரன், மற்றும் விழுப்புரம் மாவட்டம் கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த முத்துவேல், விழுப்புரம் மாவட்டம் ஓங்கூர் பகுதியை சேர்ந்த செந்தில், பிரகாஷ், முரளி,ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பாண்டிச்சேரியில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் மதுபானம் தயாரிக்க பயன்படும் ஸ்பிரிட் ஐம்பது லிட்டர் மற்றும் 35 லிட்டர் கேன்களில் தமிழகம் கொண்டு வந்து போலி மதுபானம் தயாரித்து இரவு நேர சந்து கடை விற்பனைகளுக்கு மதுபான கடைகளுக்கு கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது. இதற்கு பயன்படுத்திய ஆல்கஹால் மீட்டர், 60 ஆயிரம் பாட்டில்கள், 40 ஆயிரம் மூடிகள் போலி லேபிள்கள் என வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு நான்கு சக்கர வாகனம், ஒரு இரண்டு சக்கர வாகனம், (Eicher van ) மினி லாரி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

வட்டூர் பெத்தாம்பட்டியை சேர்ந்த மாதேஷ் (எ)மாதேஸ்வரன் திருச்செங்கோடு ஒன்றிய பகுதியைச் சேர்ந்த தேவனாங்குறிச்சி ரோட்டில் உள்ள பனங்காட்டு பாளையம் பகுதியில் உள்ள ஒரு குடோனை வாடகைக்கு எடுத்து ஒன்றிய பகுதிகளில் உள்ள 13 மதுபான கடைகளுக்கு இரவு நேர சந்து கடை விற்பனைக்காக விற்று வந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த இடம் ஒன்றிய திமுக பெண் கவுன்சிலரின்( மேனகா கார்த்தி) கணவருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்து வந்த கும்பலை கைது செய்த போலீசார் மேலும் இதில் தொடர்புடையவர்கள் யார்?

எங்கெல்லாம் போலி மது பாட்டில்கள் தயார் செய்துள்ளனர், என்பது குறித்து மதுவிலக்கு மற்றும் ஆய தீர்வை காவல் நிலைய ஆய்வாளர் சுல்தான் தலைமையில் தனி படை அமைத்து தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சில முக்கிய பிரமுகர்கள் ஒன்றிய பகுதியில் இருந்து பிடிபடுவார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முக்கியமான சாலையில் ஜன நடமாட்டம் உள்ள பகுதியில் போலி மது பான ஆலை இயங்கி வந்தது, அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *