• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பெரிய போராட்டத்தை நடத்த தயாராகும் பொதுமக்கள்

ByKalamegam Viswanathan

Dec 26, 2024

சோழவந்தானில் அனைத்து கட்சியினரையும் கண்டித்து பொதுமக்கள் மிகப் பெரிய போராட்டத்தை நடத்த தயாராகி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் மேம்பால பணிகள் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. பேருந்து நிலையம் திறந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில், பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகளும் வருவதில்லை, பயணிகளும் வருவதில்லை மயான அமைதியில் சோழவந்தான் பேருந்து நிலையம் இருப்பதாக பொதுமக்கள் கருத்து.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு வரும் ஜனவரி 5 ஆம் தேதியுடன் ஒரு வருடம் முடியும் நிலையில் பல பேருந்துகள் பேருந்து நிலையம் வராததால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக வாடிப்பட்டியில் இருந்து வரும் எந்த ஒரு பேருந்தும் பேருந்து நிலையம் உள்ளே வருவதில்லை. அதே போன்று தனியார் பேருந்துகளும் பேருந்து நிலையம் உள்ளே வருவதில்லை. மற்ற பேருந்துகளும் ஒரு சில பேருந்துகள் தவிர எந்த பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்கு வருவதில்லை. ஆகையால் வெளியூருக்கு செல்லும் பயணிகள் பொதுமக்கள் பேருந்து நிலையத்திற்கு வருவதில்லை. இதன் காரணமாக சோழவந்தான் பேருந்து நிலையம் எப்போதும் வெறிச்சோடி மயான அமைதியுடன் காணப்படுகிறது.

இதற்கு காரணமாக கூறப்படும் சோழவந்தான் மேம்பால பணிகள் முடிவடைந்திருந்தாலும் சர்வீஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத நிலையில் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்வதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாக போக்குவரத்து கழக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்கள் கூறுகையில்.., சர்வீஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே பேருந்துகள் உள்ளே வந்து செல்ல முடியும் என்ற நிலையில் சில தினங்களுக்கு முன்பு சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் பேருந்து நிலையம் அருகில் உள்ள பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அப்படியே உள்ளது. இதை அதிகாரிகளும் சரி, அரசியல்வாதிகளும் சரி கவனத்தில் கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகளும் ஏனோ இது குறித்து எந்த ஒரு போராட்டத்தை நடத்தவும் தயாராக இல்லை.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்..,

சோழவந்தான் பேருந்து நிலையம் பொது மக்களுக்கு ஒரு சாபக்கேடாக உள்ளது. சோழவந்தானில் உள்ள அனைத்து கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளும் அனைத்து துறையை சேர்ந்த அதிகாரிகளும் இதற்காக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் சோழவந்தானின் ஒட்டுமொத்த மக்களின் கோபத்திற்கும் ஆளாக கூடிய நிலை வரும். விரைவில் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்காத அனைத்து கட்சியினரை கண்டித்து பொதுமக்கள் சார்பில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை வரும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.