• Fri. May 3rd, 2024

மோடியை வேண்டுமானால் மக்கள் தூக்கி எறியலாம். ஆனால், பா.ஜ.க. எங்கும் போகாது. – பிரசாந்த் கிஷோர்

Byமதி

Oct 28, 2021

பிரதமர் மோடியின் வலிமை என்ன? என்பதை அறிந்து, புரிந்து கொள்ளாதவரை நிச்சயமாக மோடியின் இடத்துக்கு ராகுலால் ஒருபோதும் போட்டியிட முடியாது,” என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

இந்திய அரசியலில் தேர்தல் சாணக்கியர் என்ற புகழ் பெற்று விளங்குபவர் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர். பாஜக, காங்கிரஸ் தொடங்கி தமிழகத்தில் திமுக, மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என வடக்கு முதல் தெற்கு வரை அரசியல் கட்சிகளை ஆட்சியில் அமர வைத்தவர்.

அண்மையில் இவர் பாஜக அரசை தூக்கி எறியும் நோக்கில் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக காங்கிரஸ் கட்சியில் அவர் இணைய இருப்பதாக கூறப்பட்ட நிலையில் பின்னர் காங்கிரஸ் தலைமையை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்போது, கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு உத்திகளை பிரசாந்த் கிஷோர் வகுத்து வருகிறார். இந்நிலையில், கோவா அருங்காட்சியகத்தில் நடந்த கலந்துரையாடலில் பிரசாந்த் கிஷோர் பங்கேற்று பேசியதாவது: இந்தியாவில் பா.ஜ., இன்னும் 10 ஆண்டுக்கு வலுவான, சக்திமிக்க கட்சியாக இருக்கும். அந்தக் கட்சியுடன் இன்னும் நாம் பல ஆண்டுகளுக்குப் போராட வேண்டியதிருக்கும். பா.ஜ., அடுத்துவரும் தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும், தேசிய அரசியலில் அந்தக் கட்சிதான் மையமாக இருக்கும்.

மோடியை வேண்டுமானால் மக்கள் தூக்கி எறிய வாய்ப்புண்டு. ஆனால், பா.ஜ., எங்கும் போகாது. மக்கள் மோடியைத் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்று ராகுல் நினைக்கிறார். ஆனால், அது நடக்காது. மோடியின் வலிமை என்ன? என்பதை அறிந்து, புரிந்து கொள்ளாதவரை நிச்சயமாக மோடியின் இடத்துக்கு ராகுலால் ஒருபோதும் போட்டியிட முடியாது. அவரைத் தோற்கடிக்கவும் முடியாது.

தேர்தலைப் பொறுத்தவரை நாட்டில் உள்ள வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்தால் போதும். ஆதரவளித்தால் போதுமானது. மற்ற இரு பங்கு மக்கள் 10 முதல் 15 கட்சிகளுக்குத்தான் பிரித்து வாக்களித்திருப்பார்கள். ஆதலால், மோடிக்கு எதிராகவோ, பா.ஜ.,வுக்கு எதிராகவோ எந்த ஸ்திரமான கூட்டணியும் அணியும் உருவாகாது. 10 முதல் 15 கட்சிகளாகப் பிரிந்து ஓட்டு பிரிவதற்குக் காரணமே காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிதான். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *