• Tue. May 7th, 2024

மக்களை அகதிகளாக, அடிமைகளாக பார்க்கின்றனர்..,அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேதனை..!

ByP.Thangapandi

Dec 7, 2023

மக்களை மக்களாக பார்க்காமல் மனிதநேயத்தோடு அணுகாமல் ஏதோ அகதிகளாக அடிமைகளாக அதிகாரிகளும் திமுக அமைச்சர்களும் கையாளுவதை பார்க்கும்போது வேதனையின் உச்சமாக உள்ளது ஆர்பி உதயகுமார் வேதனை தெரிவித்துள்ளார்.
மதுரையில் முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்பி உதயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்ததாவது..,
இன்றைக்கு தமிழ்நாட்டிலேயே ஏற்பட்டிருக்கின்ற நிலைமை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் காரணமாக மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழப்பட்டிருக்கின்றது, ஆனால் கள நிலவரம் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டாமல் இன்றைக்கு இருக்கக்கூடிய அமைச்சர்களும் அதிகாரிகளும் மக்களை திருப்தி னபடுத்துவதற்காக நியாயப்படுத்துவதற்காக தொடர்ந்து அவர்கள் தவறான தகவல்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்
ஆகவே மக்கள் அரசின் மீது கொதித்துப் போயிருக்கின்றனர். நான்கு நாட்களாக வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்கின்றது வீட்டை சுற்றி தண்ணீர் தேங்கி இருந்தும் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் தண்ணீருக்கு தவிக்கும் அவல நிலைதான் ஏற்பட்டிருக்கின்றது. இதுதான் உண்மையான கள நிலவரம் தற்போது அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். வெள்ளம் நீர் படியாததால் வீடுகளை விட்டு வெளியே வர முடியவில்லை போன் இணைப்பு இல்லை மின்சாரம் இல்லை குடிநீர் இல்லை உணவுக்கு மிகவும் சிரமப்படுகின்றனர் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை இதனால் பால், குடிநீர் காய்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் விலைவாசி உயர்ந்துள்ளது. பாலுக்கு மக்கள் மணிக்கணக்கிலே காத்திருந்தாலும் பால் கிடைப்பதில்லை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பால் விநியோகம் முற்றிலும் தடையாகியுள்ளது. குடிப்பதற்கு தண்ணீர் கூட கடும் தட்டுப்பாடு உள்ளது. வீடுகளைப் போல கடைகளிலும் வெள்ள நீர் புகுந்ததால் முழுமையாக கடைகள் திறக்கப்படுவதில்லை இதனால் அத்தியாவசிய பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது.
ஒரு லிட்டர் பால் 200 ரூபாய், குடிதண்ணீர் 250, படகு 2500 இதுதான் சென்னையின் நிலவரம். வெள்ளத்திலே சிக்கி தவிக்கின்ற மக்களுக்கு ஒரு வேளை உணவு கிடைப்பது கூட அரிதாக உள்ளது. நிவாரணம் என்ற பெயரிலே நடக்கின்ற கேலிக்கூத்துகளை மக்கள் அருவருக்கின்றனர், உண்மையான மீட்பு பணிகள் நடக்கின்றதா என பார்த்தால் கேள்விக்குறியாக உள்ளது.
அனைத்து துறைகளும் ஒன்று இணைந்து மீட்பு பணியில் ஈடுபட வேண்டும். 14 மணி நேரம் மழை பெய்தது உண்மைதான் ஆனால் புயல் தமிழ்நாட்டிலே கரையை கடக்க வில்லை ஆந்திராவில் தான் கடந்துள்ளது அப்படி பார்க்கும்போது இவர்கள் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து உள்ளார்களா என்பதுதான் கேள்வி, கடல் உள்வாங்கவில்லை என்று கூறுகின்றனர். இதைப் போன்ற பேரிடர் காலங்களில் கடல் எப்போதுமே உள்வாங்காது. குறை கூறுவது எங்கள் நோக்கமல்ல 4000 கோடி என்கின்ற உங்களது வாதத்தை வைத்துக் கொண்டாலும் வடிகால்கள் அமைக்கின்ற பணியில் ஒன்றும் செய்யவில்லை. அதிமுகவை குற்றம் சாற்றுவதில் காட்டுகின்ற அக்கறையை மக்களை மீட்பதில் இந்த அரசு காட்டவில்லை. அதிமுக அரசின் இன்று எதிர்க்கட்சியாக உள்ளது உங்களை இன்று ஆட்சியில் அமர வைத்துள்ளார்கள் அதிகாரிகளையும் அமைச்சர்களையும் நீங்கள் நியமிக்கிறீர்கள் ஆனால் உண்மையான கள நிலவரம் முதல்வருக்கு தெரியுமா? கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் சென்று பேசுவதை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு என்ன தீர்வு கிடைத்துள்ளது.
ஒரு குடும்பத்தை மீட்பதற்கு ஐயாயிரம் ரூபாய் என இடைத்தரகர்கள் பேசி வருகின்றனர். இதைப் போன்ற சம்பவங்கள் கடந்த ஆண்டுகளில் நடந்ததே இல்லை, மனிதநேயத்தோடு மக்கள் எல்லாம் மீட்பு பணியில் ஈடுபடுவார்கள். இப்போது பார்த்தால் அப்படிப்பட்ட ஒரு செய்தியை நாம் பார்ப்பதில்லை ஆனால் இந்த அரசு அவர்களை ஊக்குவிக்கிறது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் நவம்பர் டிசம்பர் ஜனவரி முதல் வாரம் வரை கூட நீண்டுள்ளது இந்த காலங்களில் அத்தியாவசிய பொருட்கள் விலையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் அனைத்தும் கிடைக்க வேண்டும் அதுதான் பேரிடர் மேலாண்மை. அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்படும்போது மக்களை சுனாமி புயல் இருந்து கூட உயிரிழப்புகளை இல்லாமல் மீட்டெடுத்தவர் முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள்.
நேற்று வரை 17 பேர் இந்த மழையில் உயிரிழந்துள்ளனர் இது குற்றச்சாட்டு அல்ல. நிவாரண பணிகள் என்ற பெயரில் அமைச்சர்கள் மக்களை நடத்துவது அருவருக்கத்தக்க நிலையில் உள்ளது. மக்களை மக்களாக பார்க்காமல் மனிதநேயத்தோடு அணுகாமல் ஏதோ அகதிகளாக அடிமைகளாக அதிகாரிகளும் அமைச்சர்களும் கையாளுவதை பார்க்கும்போது வேதனையின் உச்சமாக உள்ளது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருந்தபோது தமிழ்நாட்டிலே புயல்கள் கரையை கடந்துள்ளது அப்போது முழுமூச்சாக இறங்கி நிவாரண தன்னார்வலர்களை இணைத்து பணிகளில் ஈடுபட்டுள்ளோம். 2015இல் அம்மா அவர்கள் புயலை கையாண்ட விதம் பாராட்டிற்குரியதாகவும் இன்றைக்கு இருக்கின்ற அரசு செயலிழந்து கிடப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. வெள்ள பாதிப்பை மக்களோடு மக்களாக வேடிக்கை பார்க்கின்றனர் மீட்பு பணியில் ஈடுபடுவதில்லை. தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் மக்களின் குற்றச்சாட்டு.
நான்காயிரம் கோடி செலவழித்துள்ளோம் புயல் வந்தாலும் வெள்ளம் வந்தாலும் சென்னையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காது என இப்படி ஒரு பொய்யான தகவல்களை இந்த அரசு சொல்லலாமா ? வானிலை ஆராய்ச்சி மையம் கொடுத்த தகவல்களை வைத்து மக்களுக்கு ஒரு சரியான தகவல்களை முன்கூட்டியே கொடுக்க வேண்டும். புயல் குறித்து அதிமுக முன்கூட்டியே எச்சரித்து வந்தது. ஆனால் சரியான நடவடிக்கை எடுக்காமல் அதிலும் விளம்பரம் தேடி வந்தீர்கள். நான்காயிரம் கோடி செலவளித்தீர்கள் எனக் கூறினீர்கள் இப்போது 5000 கோடி வேண்டும் என்கிறீர்கள்.
சென்னை மாநகராட்சி என்பது ஒரு பழமையான நகரம் அங்கு பல்வேறு சவால்கள் உள்ளது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் உண்மையைச் சொல்ல வேண்டும் ஒரு அரசு மூடி மறைப்பதினால் என்ன கிடைத்து விடப் போகிறது இப்போது மக்கள்தான் தவிக்கின்றனர், கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு அத்தியாவசிய தேவைகள் எதுவும் இல்லாமல் தவியாய் தவித்து வருகின்றனர் இதனால் தொற்றுநோய் பரவுகின்றது. இதை தவிர்ப்பதற்கு இந்த அரசு என்ன செய்யப் போகிறது ஆகவே இப்போது ஆவது விழித்துக் கொண்டு அதிகாரிகளை நியமித்திருக்கின்றோம் எனத் தூங்கிக் கொண்டிருக்காமல் மக்களைப் போர்க்கால அடிப்படையிலே மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான் முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி அவர்களின் வலியுறுத்தல், பேரிடர் மேலாண்மை துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக பெற்ற அனுபவத்தில் கூறுகிறேன் உண்மையை நீங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் அதன் மூலம் எச்சரிக்கை படுத்த தவறியதன் காரணமாகத்தான் இன்று சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் போன்ற மாவட்டங்கள் தண்ணீரிலே தத்தளிக்கின்றது மக்கள் எல்லாம் கண்ணீரிலே தத்தளிக்கின்றனர். மக்கள் எல்லாம் மகிழ்ச்சி கடலில் இருப்பார்கள் எனக் கூறினீர்கள்.
ஆனால் இப்போது துன்பக் கடலில் துயர கடையில் சோர்ந்து போயிருக்கின்றனர் மக்களை மீட்டெடுப்பதற்கு இந்த அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பதை எங்கள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி அவர்கள் வழியிலிருந்து வேண்டுகோளாக கோரிக்கையாக நான் முன்வைக்கின்றேன். புயலை விட வேகமாக செயல்பட வேண்டும் என மக்கள் நினைக்கின்றார்கள் ஆகவே இப்போது ஆவது இந்த அரசு செயல்படுமா எனக் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *