• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

உள்ளூர் வேட்பாளருக்கு வாக்களிக்க மக்கள் ஆர்வம்..,

ByKalamegam Viswanathan

Nov 18, 2025

மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் சோழவந்தான் தொகுதி தனித் தொகுதியாக உள்ளது. வாடிப்பட்டி ஒன்றியம் அலங்காநல்லூர் ஒன்றியம் மதுரை மேற்கு ஒன்றியத்தில் 12 ஊராட்சிகள் அதே போல மதுரை மாவட்டத்தில் உள்ள ஒன்பது பேரூராட்சிகளில் சோழவந்தான் வாடிப்பட்டி அலங்காநல்லூர் பாலமேடு என்ற நான்கு பேரூராட்சிகளை உள்ளடக்கியது. முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் விவசாயம் பெறும் அதிக விவசாய நிலங்களை கொண்டது என்ற பல்வேறு சிறப்புகளை பெற்றது சோழவந்தான் சட்டமன்ற தொகுதி.

இங்கே தொகுதியை சாராமல் வேறு தொகுதி நபர்களை சட்டமன்ற வேட்பாளராக நிறுத்துவதால் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த காலங்களில் உள்ளூர் வேட்பாளர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது பல்வேறு அரசின் நலத்திட்டங்கள் பல்வேறு வகைகளில் செயல்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் வேட்பாளராக இருப்பதால் தொகுதி மக்களின் தேவையை அறிந்து நலத்திட்டங்களை செயல்படுத்த வாய்ப்புள்ளது. குறிப்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சோழவந்தான் சந்திரசேகர், . எம் வி கருப்பையா, உள்ளிட்ட பல்வேறு நபர்கள் தொகுதி மேம்பாடு கருதி பல்வேறு செயல்பாடுகளில் தங்களது தனித்துவத்தை நிரூபித்துக் காட்டினர். அதன் பிறகு பிரதான கட்சிகள் வெளியூர் வேட்பாளர்களை நிறுத்தியதால் தொகுதி சுணக்கமாகியது.

குறிப்பாக அலங்காநல்லூர் பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை செயல்படாமல் இருப்பது மிகுந்த விவசாய தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு சிக்கலை ஏற்படுத்தியது.
இதனால் இந்த தொகுதியில் அதிகளவில் பயிரிடப்பட்டு வந்த கரும்பு முற்றிலுமாக குறைந்து விட்டது.

சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் மகளிர் கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக எழுந்துள்ளது ஆனால் அது குறித்து எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரும் செவிசாய்க்கவில்லை. விவசாயம் சார்ந்த பொருட்களுக்கு மதிப்பு கூட்ட எந்த ஒரு தொழிற்சாலையும் இல்லை.

அலங்காநல்லூர் பாலமேடு பகுதியில் மாம்பழ கூழ் கொய்யாப்பழ கூல் தொழிற்சாலை ஏற்படுத்தலாம் என்று பல்வேறு கோரிக்கைகள் உள்ளன

சோழவந்தான் வெற்றிலைக்கு இதுவரை ஒரு தகுந்த விலை நிர்ணயம் செய்யப்படவில்லை மருத்துவ குணம் உள்ளது என்றும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது என்றும் பெருமைகள் பேசினாலும் சரியான விலை நிர்ணயம் இல்லாமல் கொடிக்கால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். வெற்றிலைக்கு போதிய விலை நிர்ணயம் இல்லாமல் கொடிக்கால் விவசாயத்தை விட்டு திருப்பூர் கோயம்புத்தூர் என்று புலம்பெயர்ந்து வருகின்றனர்.

பழம் பெருமை வாய்ந்த அரசன் சண்முகனாரின் புகழ் குறித்து வாழ்க்கை வரலாறு குறித்து ஆவணப்படுத்தல் இதுவரை நடைபெறவே இல்லை. இது எல்லாம் உள்ளூர் வேட்பாளருக்கு நன்றாக தெரியும் தொகுதியை சாராதவருக்கு இது பற்றிய அக்கறை இருப்பதாக தெரியவில்லை.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு பிரதான கட்சிகள் உள்ளூர் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

இது சம்பந்தமாக அரசியல் மற்றும் அரசியல் சாராத அமைப்புகள் கூட்டம் நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றி பிரதான கட்சியின் தலைமைக்கு அனுப்பவும் முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது