• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இடமாற்றம்..,

ByKalamegam Viswanathan

Jun 15, 2025

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பெரியார் பாசன கால்வாய் அருகில் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் முன்பகுதியில் உள்ள இரண்டு கட்டிடங்கள் 1982ஆம் ஆண்டு கட்டப் பட்டது.

ஆனால் அதில் இன்று வரை எந்தப் பழுதும் ஏற்படவில்லை. இந்நிலையில் 43 ஆண்டுகள் ஆகிவிட்ட தால் பழைய கட்டிடத்தை இடித்து நவீனமயமாக புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் அந்த இரண்டு கட்டிடத்திலும் உள்ள அலுவலக கோப்புகள் பின்புறம் உள்ள கார் செட் மற்றும் ஒன்றிய குழு கூட்ட அறையில் வைக்கப் படுகிறது.

ஆனால் அலுவலக பணியாளர்கள் பணி செய்வதற்கு அந்த வளாகத்தில் உள்ள சேவைமைய கட்டிடம் போதுமானதாக இல்லாததால் வாடிப்பட்டியில் இருந்து 15 கி.மீ.தூரமுள்ள திருவேடகத்தில் தனியார் திருமண மண்டபத்திற்கு மாற்றப்படுகிறது.
24 மணி நேரமும் போக்குவரத்து வசதிகள் நிறைந்த தாலுகா தலைமையிடமான வாடிப்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான பயன்பாடு இல்லாத வறுமை ஒழிப்பு சங்கங்கள், இ சேவை மையம் கட்டிடங்கள், கிராம நூலக கட்டிடங்கள், சமுதாயக்கூடங்கள் பள்ளி கட்டிடங்கள் மற்றும் தனியார் திருமண மண்டபங்கள் ஏராளமாக உள்ளது.

இந்நிலையில் 8 கி.மீ தூரம் உள்ள சோழவந்தான் பகுதியிலும் ஏராளமான சமுதாயக்கூடங்கள் பள்ளி கட்டிடங்கள் இருந்தும் அதில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தாமல் பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் எளிதாக வந்து செல்ல முடியாத 2 பஸ்கள் மாறிவரும் நிலையில் உள்ள கிராம பகுதியான திருவேடகத்திற்கு மாற்றுவது வேதனைக்குரியதாகும். மேலும் இந்த புதிய கட்டிடம் கட்டும் பணி ஓராண்டு வரை தொடர்ந்து நீடிக்கும் என்பதால் 2026 ஆம் ஆண்டு உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தல் காலங்களில் அதிக சிரமத்துக்கு ஆளாக வேண்டிய நிலையும் உருவாகும்.

மேலும் வாடிப்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவால் பெரும்பாலான கட்டிடங்கள் பயன்பாடு இன்றி பூட்டி வைக்கப்பட்டு உள்ளது அவற்றில் ஏதாவது ஒன்றை அலுவலக பணிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அதுபோல் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாயக்கூடங்களும் ஏராளமாக உள்ளது. அவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது தனியார் திருமண மண்டபங்கள் அரசு ஒதுக்கி உள்ள வாடகை கட்டணத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையெல்லாம் விட்டுவிட்டு பொதுமக்கள் அவதி அடையும் நிலையில் எந்த வித அடிப்படை வசதியும் தொடர் போக்குவரத்து வசதியும், பாதுகாப்பும் இல்லாத திருவேடகம் பகுதிக்கு மாற்றுவதால் பல்வேறு பிரச்சனைகளையும் போராட்டங்களையும் சந்திக்கும் சூழ்நிலை உருவாகி வருகிறது.மேலும் இந்த இடமாற்ற பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு வாடிப்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் அல்லது 3 கி.மீ.தூர சுற்று வட்டார பகுதியில் தற்காலிகமாக அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.