மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மலை மாடுகள் மேய்க்க அனுமதி அளிக்க கோரி, தேனி கலெக்டர் முரளீதரனிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் மனு அளித்தார்.
முன்னதாக, இக்கோரிக்கையை வலியுறுத்தி, தேனி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு
தேனி மாவட்ட விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். நாட்டுமாடு நலச் சங்க பொருளாளர் ஜெயமணி, கர்னல் ஜான் பென்னிகுவிக் பாரம்பரிய நாட்டு மாடு வளர்ப்போர் சங்க தலைவர் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்ட நாட்டு மாடுகள் வளர்ப்போர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது; தேனி மாவட்டத்தை பொறுத்தவரை மலை மாடுகள் வளர்ப்போர் பல தலைமுறைகளாக மேற்குத் தொடர்ச்சி மலையை மேய்ச்சலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். 2006 ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின் மாடுகள் மேய்க்க உரிமை வழங்குகிறது. உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பில் தமிழகம் முழுவதும் மலைப்பகுதிகளில் மாடுகள் மேய்க்க தடை விதித்துள்ளது. எனவே தமிழக அரசு மேல்முறையீடு செய்து மாடு வளர்ப்பு முறையும் நாட்டு மாடுகளையும் காக்க முன்வர வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.