மலையாளம் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். தற்போது மலையாள சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வளர்ந்துள்ளார். மேலும் தமிழில் ஓ காதல் கண்மணி, பெங்களூரு டேஸ், ஹே சினாமிகா உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.
இந்திய சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக பான் இந்தியா என்ற வார்த்தை சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்படுகிறது. படத்தின் பிரம்மாண்டத்தையும், இந்திய அளவில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதையும் குறிப்பிடுவதற்காக பான் இந்தியா என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். இதைத் தாண்டி, பீஸ்ட் அரபிக்குத்து பாடல் ப்ரோமோவில் பான் வேல்டு என்ற வார்த்தையை வேறு அனிருத் அறிமுகம் செய்துள்ளார்.
இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர், அல்லு அர்ஜுனின் புஷ்பா, பாகுபலி இரண்டு பாகங்கள் துவங்கி அடுத்து ரிலீசாக உள்ள ஆர்ஆர்ஆர் படம் வரை பல படங்களுக்கும் பான் இந்தியா என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இது பற்றி துல்கர் சல்மான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசி உள்ளார். அதில் பான் இந்தியா என சொல்பவர்களை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி உள்ளார்.
துல்கர் சல்மான் கூறுகையில், பான் இந்தியா என்ற வார்த்தையை கேட்டாலே எனக்கு எரிச்சலாக உள்ளது. அந்த வார்த்தையை கேட்கவே நான் விரும்பவில்லை. சினிமாவில் மொழிகளை தாண்டி பல திறமைகள் பரிமாறப்பட்டு வருகிறது. அதை நான் விரும்புகிறேன். அது நல்ல விஷயம். இருந்தாலும் நாம் ஒரே நாடு. யாரும் பான் அமெரிக்கா என்றோ, இல்லை மற்ற நாட்டினர்கள் இப்படி சொல்லியோ நான் கேட்கவில்லை.
பான் இந்தியா படத்தை எடுக்க முயற்சித்தால் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்க முயற்சி செய்யுங்கள். எனவே உங்களின் படத்தை எந்த அளவிற்கு வேரூன்ற செய்ய முடியுமோ அவ்வளவு அழுத்தமாக செய்யுங்கள். அந்தந்த இடங்களுக்கு தகுந்த கதையை சொல்லி, வித்தியாசமாக நடித்து அதை பெரிதாக்குங்கள். அதற்கு சில பிரபலமான முகங்களை நடிக்க வையுங்கள். ஆனால் இதை எல்லாம் செய்தாலும் குறிப்பிட்ட உணர்வுகளையோ அல்லது கலாச்சாரத்தையோ நீங்கள் மீறாமல் இருக்க முடியும் என்பதை என்னால் ஏற்க முடியாது.
ஒரு மொழியில் அவர்களுக்குரிய கலாச்சாரத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் படத்தை பான் இந்தியா ரிலீஸ் என்று சொல்வதில் கொஞ்சம் கூட எனக்கு உடன்பாடு கிடையாது. பான் இந்தியா என்ற வார்த்தையை கேட்டாலே எரிச்சலாக வருகிறது’ என்றார்.