பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, 16 பாகிஸ்தான் யூ டியூப் சேனல்களுக்கு இந்தியா தடை விதித்துள்ளது.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 17 பேர் காயமடைந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஷ்மீருக்குச் சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் மீது பயங்கரவாத கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பஹல்காம் சம்பவம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கசப்பை அதிகரித்துள்ளது, இது இரு நாடுகளுக்கும் இடையே ஒரு புதிய இராஜதந்திரப் போரை ஆரம்பித்துள்ளது. ஒருபுறம், இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது, இது பாகிஸ்தானின் 20 கோடிக்கும் மேற்பட்ட மக்களை பாதிக்கும். மறுபுறம், பாகிஸ்தான் இந்தியாவிற்கான தனது வான்வெளியை மூடியுள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்திய அரசு தேசிய பாதுகாப்பு பார்வையில் முக்கிய முடிவெடுத்து, பாகிஸ்தானைச் சேர்ந்த 16 யூடியூப் சேனல்களை தடை செய்துள்ளது.
ஏன் இந்த தடை?
• இந்தியா மற்றும் அதன் பாதுகாப்புப் படைகள் குறித்து தவறான தகவல்களை பரப்பின.
• சமூக விரோதப் பிரச்சாரங்களை ஏற்படுத்த முயன்றன.
• பஹல்காம் தாக்குதலின் உண்மை நிலையை மாறுபடுத்தும் விதத்தில் போலியான செய்திகளை வெளியிட்டன.
• இந்திய மக்களிடையே குழப்பம் மற்றும் திசைதிருப்பல் ஏற்படுத்தும் வகையில் வீடியோக்கள் வெளியிட்டன.
தடை செய்யப்பட்ட முக்கிய சேனல்கள்: தடை செய்யப்பட்ட 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களில் முக்கியமானவை: Dawn News, Samaa TV, ARY News, Geo News மற்றும் பல பாகிஸ்தானிய ஊடகங்களுடன் இணைக்கப்பட்ட தனிநபர் மற்றும் குழு இயக்கும் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தற்போது இந்தியாவிலிருந்து அணுக முடியாத நிலையில் உள்ளன.
இதுகுறித்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்ததாவது, “இந்த நடவடிக்கை, நாட்டின் எதிரிகளால் மேற்கொள்ளப்படும் தகவல் போர் முயற்சிகளை தடுக்கவும், உண்மையான தகவல் பரப்புதலை உறுதி செய்யவும் மேற்கொள்ளப்பட்டது. மேலும், அரசு எதிர்காலத்திலும் இந்தியா எதிர்கொள்ளும் தவறான தகவல் சவால்களுக்கு உடனடி பதிலடி கொடுக்கும் என்றும் அறிவித்துள்ளது.
இந்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கையில், யாராவது இந்தியா தொடர்பான தவறான செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பினால், அவர்களுக்கும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவின் பாதுகாப்பை குறைக்கும் எந்த முயற்சிக்கும் பொறுப்பு இல்லாமல் கடும் எதிர்வினை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த 16 யூடியூப் சேனல்கள், இந்தியாவுக்கு எதிரான தவறான செய்திகளை பரப்பியதால் இந்திய அரசு அவற்றை தடைசெய்துள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.