• Mon. Apr 29th, 2024

சிந்தனைத்துளிகள்

Byவிஷா

Oct 16, 2023

ஒரு சமயம் சோழ மன்னனுக்கு வினோதமான ஒரு சிந்தனை தோன்றி, உடனே தன் அரண்மனைப்புலவர்கள் அனைவரையும் அழைத்து, நாளை காலைக்குள் நான்கு கோடி பாடல்கள் எழுதி வரவேண்டும் என ஆணையிட்டார்.

நான்கு பாடல்கள் எழுதவே நான்கு வாரமாகிவிடுகிறது. இதில் எங்கே நான்குகோடிப் பாடல்கள் எழுதுவது என்று புலவர்கள் எல்லாம் சிந்தைகலங்கி நின்றபோது, அங்கே வந்த அவ்வையார் “என்ன வருத்தம்?” என்று கேட்க, அவர்கள் அரசனின் உத்தரவை சொல்ல, அவ்வையார் இளமுருவலுடன் ” இவ்வளவுதானா, நான் எழுதித்தருகிறேன் நான்கு கோடி பாடல்கள் கொண்டுபோய் உங்கள் மன்னனிடம் கொடுங்கள்” என்றுகூறி, நான்கு பாடல்கள் மட்டும் எழுதி அவர்களிடம் கொடுக்க, புலவர்கள் தயங்கிநிற்க, அவ்வையார் ” ஒவ்வொரு பாடலும் ஒருகோடி பொன் மதிப்புடையது சென்று கொடுங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.

புலவர்கள் அவையில் இந்த கோடிப்பாடல்களை வாசிக்க, மன்னன் வியந்து, இவற்றை நிச்சயம் அவ்வையார்தான் இயற்றியிருக்க முடியும் எனப்புலவர்களைப் பார்க்க, புலவர்கள் அனைவரும் ஆமாம்.

அவ்வையார் இயற்றியதுதான் எனக்கூற, மன்னன் மனமகிழ்ந்து அவ்வையை அழைத்து, பெரும் பரிசு அளித்து, பெரு மரியாதை செய்து போற்றினான் என்பது வரலாறு.

அந்த நான்குகோடி பாடல்கள்:

  1. மதியாதார் முற்றம் மதித்தொரு கால் சென்று மிதியாமை கோடி பெறும்.

நல்ல பண்புகளைக் கைக்கொள்ளாமல் வாழ்பவர் வீட்டிற்கு செல்லாதிருப்பது, கோடி பொன்னுக்கு சமம். அல்லது மதிக்காதவர் வீட்டுக்கு செல்லாமல் இருப்பது எனவும் பொருள் கொள்ளலாம்.

  1. உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்.

உணவை அருந்த அன்புடன் அழைக்காமல், வெறும் வாய்ச்சொல்லில் அழைப்போர் வீடுகளில், சாப்பிடாமல் இருப்பது கோடி பொன்னுக்கு சமம்.

  1. கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும். கோடி பொன்னைக் கொடுத்தாவது, நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களிடம் சேர்ந்து வாழ்வது, கோடிப் பொன்னுக்கு ஒப்பாகும்.
  2. கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைய நாக் கோடாமை கோடி பெறும்.

கோடி பொன் கொடுப்பதாகச் சொன்னாலும், சொன்ன சொல் மாறாமல் வாழ்பவன் கோடி பொன்னுக்கு சமம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *