• Sat. Sep 20th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Sep 20, 2025

நெஞ்சில் இருக்கும் பாரம் குறைய சிரித்து மகிழுங்கள்!

‘வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்பது பழமொழி. சிரிப்பு மனிதனுக்கு இறைவனால் படைக்கப்பட்ட சொத்தாகும். சிரிப்பு ஒரு சிறந்த மருந்து, சிந்தனைக்கு நல்ல விருந்து.

சிரித்து மகிழ்வதால் மனம் நிம்மதி அடைகிறது. இப்பொழுது மக்கள் நூற்றுக்கு எண்பது விழுக்காடு பிரச்னைகளை மனத்தில் தாங்கிக்கொண்டு சிரித்து மகிழ முடியாத நிலையில் மன நோயாளியாகவே உள்ளனர். அதன் காரணமாகவே இன்றைய – அன்றைய சினிமாக்களிலும், பத்திரிகைகளிலும் நகைச்சுவைகளை மக்களுக்கு தந்து மகிழ்விக்கின்றனர்.

சிரிப்பின் மன்னரான கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் சிரிப்பின் பல வகைகளையும் அழகாக சித்தரித்து, சிரித்தும் காட்டுவார்கள். முகத்தில் சிரிப்பு இல்லாத ஒருவனைப் பாருங்கள். அவனுடைய வாழ்க்கையில் நிம்மதி இல்லாதவனாக இருப்பான் .சிரித்து மகிழ்வதால் துன்பங்களும், தொல்லைகளும் மறக்கப்பட்டு மகிழ்ச்சி உண்டாகிறது.

நன்றாகச் சிரித்து மக்களுடன் மகிழ்ந்திருப்பவனுக்குக் கஷ்டங்கள் ஒரு பாரமாகவும், பிரச்னையாகவும் எப்பொழுதும் இருப்பதில்லை.

மடியில் கனமில்லாதவனுக்கு வழியில் பயமில்லை. என்பதுபோல நெஞ்சில் பயமில்லாதபடி தெளிந்த சிந்தையுடன் கவலையில்லாது இருப்பவன் எப்பொழுதும் தைரியசாலியாகவும் மகிழ்ச்சியுடன் சிரித்த முகத்துடனும் இருப்பான்.

விகட கவியாகிய தெனாலிராமன் தன்னுடைய அவையில் எப்பொழுதும் நகைச்சுவை கலந்த விடுகதைகளாலும், கதைகளாலும் மன்னனையும் மக்களையும் மகிழ்வித்த வண்ணம் இருப்பான்”

மன்னனுக்கு ஏற்படும் எப்பேர்பட்ட சிக்கல்களையும் பிரச்னையையும் தன் நகைச்சுவைப் பேச்சுத்திறத்தாலும் சிலேடை நயத்தாலும் பேசிக் காரியத்தை முடிப்பான். அதனால் தெனாலிராமனுக்கு ‘விகடகவி’ என்று பெயர் சூட்டி மகிழ்விக்கப்பட்டது.

எப்பொழுதும் சிரித்த முகத்துடன் பேசி வேலை செய்பவன் மற்றவர்கனைக் கவருவான், பொலிவான முகத்துடன் காட்சி அளிப்பான். தூய்மையான எண்ணத்துடன் இருப்பவனால்தான் நன்றாகச் சிரித்து மகிழ்ச்சியுடன் இருக்கமுடியும்.

மேலும், நண்பர்களின் மத்தியிலும், மற்றவர்களின் மத்தியிலும் நம்பிக்கையின் நட்சத்திரமாய் பிரகாசிப்பான்.

நமது வாழ்க்கையில் மகிழ்ச்சியோடு இருப்பதும், பிறருக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதும் ஒரு தனிக்கலை. இந்தக் கலையை எந்தக் கல்லூரியிலும் கற்றுத்தரமாட்டார்கள்,கற்றுத்தரவும் முடியாது. இது தானாகவே பயிலவேண்டிய கலை.

இன்று பலரும் மகிழ்ச்சி என்பது பணத்தில் மட்டும்தான் இருக்கிறது என்று நினைக்கிறார்கள். அதில் ஓரளவுதான் உண்மை இருக்கிறது. கலிப் அப்துல் ரஹ்மான் என்று ஒரு பெரும் மன்னன். ஏறத்தாழ நாற்பத்தொன்பது ஆண்டுகள் ஒரு பெரும் சாம்ராஜ்யத்தை மிகச்சிறப்பான முறையில் ஆண்டவன். அந்தக் காலகட்டத்தில் வேறு எவராலும் வெற்றிகொள்ள முடியாத சேனைகளையும், கடற்படைகளையும் வைத்திருந்தவன்.

செல்வமோ கணக்கில் அடங்காதவை. அவன் இறந்த பின் அவனது உயிலை எடுத்துப் படித்தார்கள். அவன் இப்படி எழுதி வைத்திருந்தானாம்.

‘என்னுடைய இந்த நீண்ட அரசாட்சியில் நான் எத்தனை நாட்கள் உண்மையில் மகிழ்ச்சியுடன் இருந்திருக்கிறேன் என்று கணக்குப் பண்ணி வைத்திருக்கிறேன். நான் மகிழ்ச்சியுடன் இருந்த நாட்கள் மொத்தம் பதினான்குதான்.’

எல்லா பலமும் பெற்ற ஒரு மன்னன் பதினான்கே பதினான்கு நாட்கள்தான் மகிழ்ச்சியாய் வாழ்ந்திருக்கிறான் என்றால், அதில் பணத்திற்கு என்ன பங்கிருக்க முடியும்? மகிழ்ச்சியும் சிரிப்பும் நாம்தான் உண்டாக்கிக் கொள்ளவேண்டும். அந்த அற்புதமான புதையல் நம்மிடமே உள்ளது. அந்த புதையலின் ரகசியத்தைப் புரிந்து கொண்டால் சொர்க்கம் என்பது எங்கேயோ அல்ல, அது நம்மிடையேதான் இருக்கிறது என்பது தெளிவாகும்.