• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jan 18, 2025

எதற்காக இந்த ஓட்டம்

எல்லோரும் அதிவேகமாக..
ஓடுகிறார்கள்.

நவீனம் நடத்தும் பொருளாதார பந்தயத்தில் ஓடுவதற்கு தடங்கலாக இருந்த சொந்த ஊர்களை உதறித் தள்ளி விட்டு வேகமாக ஓடினார்கள்..
பந்தயம் கடினமாக இருந்த போது.. வேகத்தை மேலும் கூட்ட தாய்மொழி தடையாக இருக்கவே அதையும் ஒதுக்கிவைத்து ஓடினார்கள்..
பின்னர் தர்மசிந்தனைகள், கடமை, கண்ணியம் கூட சுமைகளாகிப் போயின..
எனவே அவை அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு ஓட்டத்தைத் தொடர்ந்தனர்..
உறவுகள் சுமையாக தொந்தரவாக அவர்களுக்குத் தோன்றின..

எனவே அவற்றையும் விட்டுத் தள்ளினார்கள் அல்லது வில(க்)கி ஓடினார்கள்..
இந்த நவீன மனிதர்களுக்குப் பொருளாதார வசதி புகழ் வெற்றிகரமான வாழ்க்கை என்ற அடங்காத வெறி மட்டுமே எஞ்சி உள்ளதால் பந்தயத்தில் வேக வேகமாக ஒடிக் கொண்டிருக்கிறார்கள்..

இனி அவர்கள் வீசி எறிய எதுவுமில்லை!..
குடும்பங்கள் சிதறிக் கிடக்கின்றன…
மடிக்கணினித் திரை வழியாக பேரப்பிள்ளைகளைக் கொஞ்சும் பெரியவர்களை பெற்றெடுத்திருக்கிறார்கள், பந்தயத்தில் ஓடும் பிள்ளைகள்!…
பிறந்த குழந்தையின் பசிக்கு பாலூட்டவும் குளிப்பாட்டவும் நேரம் இல்லாத
இளம் அம்மாக்களும் உருவாகிவிட்டார்கள்..
மனைவி வலியால் துடித்தாலும் அரவணைத்து மருந்து கொடுத்து அக்கறையும் பாசமும் காட்ட நேரம் இல்லாத கணவர்களும் மலிந்து போனார்கள்…
என்றாலும் எல்லோரும் ஒடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

பல பெரியவர்களுக்குப் பிள்ளைகளைப் பார்க்காத ஏக்கத்தில் மாரடைப்பு வருகிறது..

சிலருக்கு அவர்கள் படும் பாட்டை நினைத்தவாரே உயிர் பிரிகின்றது..
மருத்துவச் செலவுக்கு அனுப்பும் பணம் கூட அவரவர் கணக்குகளில் வங்கிகளில் நிரம்பி வழிகின்றன..
மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லவும் முடிவதில்லை…
எல்லோருடைய நேரத்தையும் நிறுவனங்களும் கேளிக்கைகளும் செல்போன்களும் விழுங்கிவிட்டன..
தொடு திரையில் வாழ்த்துக்கள்
நகரங்கள் விரிவடைய, மனித மாண்பு வெகுவாகச் சுருங்கி விட்டது.
மூன்று வயது நிரம்பாத குழந்தைகள், மழலைக் காப்பகங்களுக்கும்
ப்ளே ஸ்கூல்களுக்கும் அனுப்பி வைக்கப் படுகின்றனர்..

இவர்கள் ஓட்டத்திற்கு இந்த குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி கூட தடையாக தென்படுகின்றது !..
தொடக்கத்தில் கூட்டுக்குடும்பங்கள் தனிக்குடும்பங்களாகின..
இப்போது தனிக்குடும்பங்களின் உறுப்பினர்கள் தனித்தனியாகப் பிரிந்து இயங்குகிறார்கள்..

இனி சொல்வதற்கு ஒன்றுமில்லையே!

மனித இனம் நிம்மதியற்ற பாதையைத் தேர்ந்தெடுத்து ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கிறது..

இனி அதுவே. நினைத்தாலும் நிறுத்த முடியுமா என்ன?…