• Mon. Apr 29th, 2024

ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவு..!

Byவிஷா

Jan 23, 2024

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996 ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து போயஸ் தோட்டம் இல்லத்தில் இருந்து தங்க, வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், கைக் கடிகாரங்கள் என ஏராளமான பொருட்களை கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.
இவ்வழக்கு விசாரணை பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட நகை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் அங்குள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டன. இந்த வழக்கு முடிந்து சசிகலா உள்ளிட்டவர்கள் சிறை தண்டனை அனுபவித்து வெளியில் வந்துள்ளனர். ஆனாலும், இந்த நகைகள் அனைத்தும் தற்போதும் கர்நாடகா கருவூலத்தில் உள்ளன.
இந்தநிலையில் ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வேண்டுமெனவும், அதன்மூலம் வரும் பணத்தை நலத் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டுமெனவும் சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அரசால் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களில் தனக்கு உரிமை உண்டு எனவும், அவற்றை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் மனுதாக்கல் செய்தார். இந்த நிலையில் ஜெயலலிதாவின் பொருட்கள் தொடர்பான வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹெ.ஏ.மோகன், “நகைகளை ஏலம் விடுவதற்குப் பதிலாக, தமிழக அரசின் உள்துறை மூலமாக தமிழகத்துக்கு மாற்றுவது நல்லது என்று நான் கருதுகிறேன். ஆகவே, தமிழக அரசு செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரியை நியமித்து அவர் மூலமாக போலீஸாருடன் இணைந்து நகைகளை பெற்றுக்கொள்ள வருமாறு உத்தரவிடுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து விரைவில் ஜெயலலிதாவின் நகைகளை தமிழகத்திற்கு எடுத்துவரும் பணிகள் தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை நடத்துவதற்கு கர்நாடக அரசு செய்த செலவினங்களுக்காக கர்நாடக அரசின் பெயரில் 5 கோடி ரூபாய்க்கான வரைவோலையை அனுப்புமாறும் தமிழக அரசுக்கு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *