• Sun. Apr 28th, 2024

எடப்பாடிக்கு எதிராக கொடநாடு விவகாரத்தை கையிலெடுக்கும் ஓ.பி.எஸ்..!

Byவிஷா

Jul 11, 2023

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், கொடநாடு வழக்கை விரைவாக விசாரணை நடத்த வலியுறுத்தி, ஆகஸ்ட் 1ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஓ.பி.எஸ் அறிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்திய தேர்தல் ஆணையமும், அவரை கைவிட்டுவிட்டு, எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச் செயலாளர் என அங்கீகாரம் செய்துள்ளதால், அரசியல் அநாதையான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடிக்கு எதிராக கொடநாடு கொலை வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்தி போராட்டம் அறிவித்து உள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அவரது கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடந்தது. இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல முறை விசாரணை அதிகாரிகள் மாற்றப்பட்டு, மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், முன்னாள் முதல்வர் எடப்பாடிக்கு பங்கு இருப்பதாக திமுக உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால், இதுவரை அவர்மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்படவில்லை.
இதற்கிடையில் அதிமுகவில் எழுந்த மோதல் காரணமாக, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால் ஓபிஎஸ் திமுகவுக்கு ஆதரவான மனநிலையிலேயே இருந்து வருகிறார். மேலும் எடப்பாடி மீது ஓபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் புஸ்வானமாகி போன நிலையில், தற்போது தேர்தல் ஆணையமும் அவரை கைவிட்டு விட்டது. இந்த நிலையில், எடப்பாடிக்கு எதிராக காய் நகர்த்தும் நோக்கில், கொடநாடு கொலை வழக்கில் விரைந்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டுமென தமிநாடு அரசை வலியுறுத்தி போராட்டத்தை அறிவித்து உள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், தனது ஆதரவாளர்கள் மூலம், ஆகஸ்டு 1ந்தேதி மாநில முழுவதும், கொடநாடு கொலை வழக்கு குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என அறிவித்து உள்ளார். இதையடுத்து, செய்தியாளர் ஒருவர், நீங்கள் 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் கூறிய ஓபிஎஸ், அப்போது தான் அரசின் துணை முதலமைச்சராக இருந்ததாகவும், அப்போதைய அரசில் துணை முதலமைச்சருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்று கூறியதுடன், நான் பதவி வகித்த போதும் எந்த அதிகாரமும் எனக்கு இல்லை என்று மழுப்பினார்.
கொடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில், இதுவரை எந்தவிதமான தகவலும் கிடைக்காத நிலையில், அரசை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த வழக்கு 6 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. எதிர்கட்சி தலைவராக மு.க ஸ்டாலின் இருந்த போது ஆட்சிக்கு வந்தால், தீவிர விசாரணை நடத்தி குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிப்போம் என வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அவர் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டு ஆகியும் எந்த முன்னேற்றமும் இல்லை. அதனால் தான் தற்போது வலியுறுத்துகிறோம்” என கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் கலந்துகொள்ள எடப்பாடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் கூறிய ஓபிஎஸ், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் ஆலோசனை கூட்டத்திற்கான அழைப்பு தனக்கு இதுவரை வரவில்லை என்றும், கட்சியை விட்டு நீக்கப்பட்டு ஓராண்டு காலம் நிறைவடைந்துள்ள நிலையில், நீதி கிடைக்கும் வரை போராடுவோம் எனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பண்ருட்டி ராமசந்திரன், “குற்றங்கள் நடந்தால், குற்றவாளியை கண்டுபிடிப்பது அரசின் கடமை. ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரியவில்லை. எடப்பாடி முதலமைச்சராக இருந்த போது சட்டம் ஒழுங்கு அவருக்கு கீழ் இருந்தது. அதனால், இந்த வழக்கில், யார் குற்றவாளிகளை காப்பாற்றினார்கள் என்பதையும் கண்டுபிடிக்கப்பட வேண்டும்” என கூறினார்.
தேர்தல் முறைகேடு காரணமாக, ஓ.பி. ரவிந்திரநாத் தகுதி நீக்கம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே என்ற கேள்விக்கு பதில் கூறிய பண்ருட்டி ராமசந்திரன், “இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளோம். இதில் இரண்டு விஷயம் நடந்துள்ளது. ஒன்று வேட்பமனுவில் முழு விவரம் இல்லை, இரண்டாவது வேட்பமனுவை நிராகரிப்பது பதிலாக அதனை ஏற்றுள்ளார் தேர்தல் அதிகாரி. இதற்கு மேல் முறையீடு செய்ய உள்ளோம் என தெரிவித்தார்.
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் ஓரங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்திய தேர்தல் ஆணையமும் ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டிவிட்டு, எடப்பாடி மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நிர்வாகிகளாக அங்கீகரித்துள்ளது. இதனால் ஒபிஎஸ், மீண்டும் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதனால், எடப்பாடிக்கு எதிரான மனநிலையில், கொடநாடு கொலை வழக்கை விரைந்து விசாரிக்கும்படி, திமுக அரசை வலியுறுத்தி போராட்டத்தை அறிவித்திருப்பது பலராலும் விமர்சிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *