• Sat. Apr 27th, 2024

ஓ.பி.எஸ். அணியில் எல்லோரும் ஒன்று திரண்டால்…எடப்பாடியை அநாதை ஆக்கலாம்..? உ. தனிஅரசு பேட்டி

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அளிப்பதாக கூறி அவரை சந்தித்து திரும்பியுள்ளார், ‘தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை’யின் நிறுவனத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான உ.தனியரசு.
அவரிடம் அரசியல் டுடே டாட்காம்காக ஓரிரு கேள்விகளை முன் வைத்தோம்.
கே: அரசியல் களத்தில் இதுநாள் வரை அமைதியாக இருந்த நீங்கள், இப்போது திடீரென்று ஓ.பி.எஸ்.ஸை சந்தித்து இருப்பது பற்றி..?
ப : ‘’ஓ.பி.எஸ். எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாதபடி தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குழப்பிக் கொண்டே இருக்கிறார்.
ஈரோடு தொகுதியில் பா.ஜ.க.வை நிறுத்தாமல் எடப்பாடிக்கு ஆதரவு கொடுத்து அவரை இரண்டாவது இடத்துக்கு கொண்டுவந்து ஆளாக்க சாதிப் பாசத்தால் துடியாய் துடிக்கிறார் அண்ணாமலை.
கே : ஓ.பி.எஸ். இருவருமே பா.ஜ.க.வின் ஆதரவை கேட்டவர்கள்தானே? யாருக்கு ஆதரவு என்கிற நிலைப்பாட்டை எடுக்கும் போது யாரையாவது ஒருவரைத்தானே ஆதரிக்க முடியும்?
ப : ‘’வாஸ்தவம்தான். எடப்பாடியும், அண்ணாமலையும் கொங்குவேளாளக் கவுண்டர் பேரவையில் அண்ணாமலை மாநில தலைவராகவும், இ.பி.எஸ். பொதுச்செயலாளராகவும் இருந்தவர்கள்தான். அப்படி இருக்கும் போது ஓபிஎஸ்.ஸை எப்படி ஆதரிப்பார்?அண்ணாமலை, வானதி, இ.பி.எஸ். எல்லோரும் ஓர் அணியில்தான் இருப்பார்கள்.
ஓ.பி.எஸ். தயக்கம் காட்டக் கூடாது. ஆட்டோவில் சுறுசுறுப்பாக ஏறி நின்று ஓட்டு கேட்டு வர்ற இளைஞர் யாரையாவது ஈரோடு கிழக்குத் தொகுதியில் நிறுத்தவேண்டியதுதான்’’.
கே: நீங்கள் தமிழ்நாடு கொங்குஇளைஞர் பேரவை என்றொரு தனி அமைப்பை நடத்தி வருகிறீர்கள். ஓபி.எஸ். – இ.பி.எஸ்.இரண்டு அணிகளாக இருப்பதால் உங்களுக்கு என்ன கவலை?
ப : ‘’அப்படியில்லை..அது அம்மா கட்சி. அம்மாவின் ஆதரவோடு நான் இரண்டு முறை கூட்டணிக் கட்சியாக இருந்து தொடர்ந்து பத்து ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருந்தவன். அந்த பாசத்தினால் வந்த அக்கறைதான். இரண்டு அணியும் ஒன்றாக இணைய வேண்டும் என்கிற ஆசைதான்.வலிமையாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம்.
அதனால்தான் பிரிந்துக் கிடக்கும் அ.தி.மு.க. மூத்த தலைவர்களான பன்ருட்டி ராமச்சந்திரன், அன்வர் ராஜா, கே.சி.பி. போன்ற இன்னும் சில தலைவர்களை ஒன்று சேர்த்து அழைத்து இணைத்து கொள்வதோடு, டி.டி.வி.தினகரன், சின்னம்மா, ஏ.சி.சண்முகம், ஜான்பாண்டியன் ஆகியோரை எல்லாம் ஓ.பி.எஸ். அணியின் தலைமையில் இ.பி.எஸ்.ஸை எதிர்த்து நின்றால் அந்த அணியை 3வது இடத்துக்கு தள்ளி, எடப்பாடியை அநாதை ஆக்கிவிடலாம். இதற்குதான் அண்ணாமலை தடையாக இருக்கிறார். இதனால் பா.ஜ.க.விலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தை ஓ.பி.எஸ்.பிடிப்பார். பா.ஜ.க.தனியாக நிற்காது. இ.பி.எஸ்.க்கு ஆதரவு தந்து எடப்பாடிக்கு வழிவிடுவதற்காகதான் ’கூட்டணியில் பெரிய கட்சி எதுவோ அந்த கட்சிதான் தேர்தலில் நிற்க வேண்டும்” என்று அண்ணாமலை திரும்பத்திரும்ப சொல்லும் காரணம், இ.பி.எஸ்.அணிதான் பெரிய கட்சி என்று சொல்லாமல் சொல்கிறார். இரட்டை இலை இல்லாத இரண்டு அணியாக இருக்கும் கட்சியில் இ.பி.எஸ்.பெரிய கட்சி என்று அண்ணாமலை சொன்னால், அவர் பா.ஜ.க.வில் இருந்துக் கொண்டு அக் கட்சிக்கு துரோகம் செய்கிறார் என்றுதான் அர்த்தம்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *