• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாட்டில் நடப்பது சட்டவிரோத ஆட்சி – ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு!

ByP.Kavitha Kumar

Mar 20, 2025

அன்றாட படுகொலைகளுக்குக் காரணம் தமிழ்நாட்டில் சட்ட விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதுதான் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு உட்பட எதுவுமே முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் நேற்று நண்பகல் 12 மணியளவில் ஈரோடு மாவட்டம் நசியனூர் கோவை-சேலம் நெடுஞ்சாலையில் படுகொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த படுகொலைச் சம்பவம் தமிழ்நாட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாகவும், இவர் நேற்று காலை சேலத்திலிருந்து அவரது மனைவியுடன் காரில் திருப்பூர் சென்று கொண்டிருந்ததாகவும், ஈரோடு மாவட்டம் நசியனூர் கோவை-சேலம் நெடுஞ்சாலையில் நண்பகல் 12 மணியளவில் சாமி கவுண்டம்பாளையம் பிரிவு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, அவர்களைத் தொடர்ந்து வந்த மர்மக் கும்பல் அந்தக் காரை வழிமறித்து, கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் இருந்த ஜான் என்கிற ரவுடியை சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரது மனைவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. இந்தப் படுகொலை கடும் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற அன்றாட படுகொலைகளுக்குக் காரணம் தமிழ்நாட்டில் சட்ட விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதுதான்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், பட்டப் பகலில் நடைபெற்ற இந்தக் கொலையையும், நாள்தோறும் பல கொலைகள் இதுபோன்று நடப்பதையும் பார்க்கும்போது வன்முறையாளர்களின் புகலிடம் தமிழ்நாடு என்ற கருத்திற்கு மாற்றுக் கருத்து இல்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. காவல்துறை என்ற ஒன்று இருக்கிறதா என்று சந்தேகப்படக்கூடிய அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுப் போய்விட்டது. இந்த நிலைமை நீடித்தால் வன்முறையில் முதன்மை மாநிலம் தமிழகம்தான் என்ற பெருமையை தமிழகத்திற்கு திமுக அரசு தேடித் தரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

தமிழ்நாட்டை அமளிக்காடாக மாற்றியிருக்கும் திமுக அரசின் செயல்பாடுகளைக் கண்டிப்பதோடு, தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் வன்முறையிலிருந்து காப்பாற்றவும், தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறக்கும் சமூக விரோதச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.