• Mon. May 6th, 2024

இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் திட்டம்..!

Byவிஷா

Oct 12, 2023

காசாவில் ஹமாஸ் குழுவுடனான போருக்கு மத்தியில் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் நாடுதிரும்புவதற்கு வசதியாக ஆபரேஷன் அஜய் மீட்புப் பணிகளை இந்தியா தொடங்கியுள்ளது. அதன்படி இஸ்ரேலில் உள்ள 18,000 இந்தியர்களை பத்திரமாக அழைத்துவரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
“சிறப்பு விமானங்கள் மற்றும் பிற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. வெளிநாட்டில் உள்ள இந்தியரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம்” என வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
முதல் கட்டமாக நாளைய தினம் முதல் சிறப்பு விமானத்தில் இந்தியர்கள் இந்தியாவுக்கு அழைத்துவரப்படுவார்கள் என்று இஸ்ரேலில் உள்ள இந்தியாவின் தூதரகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே தூதரகத்தில் பதிவுசெய்திருந்த இந்திய குடிமக்களுக்கு சிறப்பு விமானத்தில் நாளை நாடு திரும்புவது தொடர்பாக மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. பதிவுசெய்திருக்கும் மற்ற நபர்களும் அடுத்தடுத்த விமானங்களில் அழைத்துவரப்பட உள்ளனர் என்றும் இந்தியத் தூதரகம் சொல்லியிருக்கிறது.
இஸ்ரேல் ஹமாஸ{க்கு எதிரான போரை நடத்திவரும் நிலையில், ஹமாஸ் ஆட்சி செய்யும் காசா பகுதி மீது இஸ்ரேல் வெடிகுண்டு மற்றும் ராக்கெட் தாக்குதல்களை நடத்துகிறது. கடந்த ஐந்து நாட்களாக நடைபெறும் போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். பாலஸ்தீனியப் பகுதிகளைச் சுற்றி இஸ்ரேல் தனது இராணுவப் படைகளைக் குவித்து முற்றுகையிட்டுள்ளது. ஹமாஸ் சுமார் 150 பணயக்கைதிகளை பிடித்து வைத்துள்ளது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அவர்களில் குறைந்தது 14 தாய்லாந்து, இரண்டு மெக்சிகன் உள்ளனர். இவர்கள் தவிர பணயக் கைதிகளாக இருக்கும் அமெரிக்கர்கள் மற்றும் ஜெர்மானியர்களின் எண்ணிக்கை தெரியவில்லை.
புதன்கிழமை லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா பயங்கராதக் குழு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசியுள்ளது. இதற்குப் பதிலடியாக இஸ்ரேலிய ராணுவம் தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா குழுவின் ராணுவ கண்காணிப்பு நிலைகளில் ஒன்றைத் தாக்கியுள்ளது. சிரியாவில் இருந்து இஸ்ரேலின் கோலன் குன்றுகளை நோக்கி வெடிமருந்துகள் வீசப்பட்டதாகவும், இதனால் செவ்வாய்க்கிழமை சிரியாவில் உள்ள போராளிகளுடன் துப்பாக்கிச் சண்டை நடத்தியதாகவும் இஸ்ரேல் தரப்பில் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *