• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை நடை திறப்பு

Byவிஷா

May 14, 2024

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை மட்டுமின்றி ஒவ்வொரு மாத பிறப்பின்போதும் 5 நாட்கள் கோவில் நடை திறந்து, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறாகள். அதன்படி வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை (செவ்வாய்க்கிழமை) 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
அய்யப்பன் கோவில் கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். அதன் பிறகு பதினெட்டாம் படிக்கு அருகே உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். இன்று மாலை வேறு எந்தவொரு பூஜைகளும் நடைபெறாது. இரவில் அரிவராசனம் பாடப்பட்டு நடை சாத்தப்படும்.
பின்பு நாளை (15-ந்தேதி) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். தொடர்ந்த, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாளபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறும். அது மட்டுமின்றி நாளை முதல் வருகிற 19-ந்தேதி வரை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
இந்த 5 நாட்களும் காலை முதல் மதியம் வரையிலும், மாலை முதல் இரவு வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும் நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுவார்கள். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் கடைசி நாளான, வருகிற 19-ந்தேதி இரவில் அத்தாள பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10:30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப் படுவதை முன்னிட்டு கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பம்பைக்கு பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.