• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து

Byவிஷா

May 20, 2024

நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரயிலில் பயணம் செய்யும் போது இயற்கை எழில்மிகு காட்சிகள், வனவிலங்குகள், மலைமுகடுகளை தழுவி செல்லும் மேக கூட்டங்கள், அருவிகள், நீரோடைகள் உள்ளிட்ட பல இயற்கை காட்சிகளை பார்த்து ரசிக்கலாம்.
மலைப் பாதையில் ஊர்ந்து செல்லும் இந்த ரயிலில் பயணிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம் – ஊட்டி மலைரயில் பாதையில் அடர்லி – ஹில்குரோவ் ரயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பாறாங்கற்கள் உருண்டு ரயில் தண்டவாளத்தில் விழுந்தன. சில இடங்களில் மண்சரிந்து தண்டவாளத்தை மூடியது.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மலைரயில் சேவை ரத்து செய்யப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணம் திரும்ப வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.