• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அட்டகாசமாகத் தொடங்கிய ஊட்டி மலர் கண்காட்சி

Byவிஷா

May 11, 2024

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இன்று தொடங்கப்பட்டுள்ள 126வது மலர் கண்காட்சியில் கொய் மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட டிஸ்னி வேர்ல்டு, நீலகிரி மலை ரயில் எனப் பல்வேறு கண்ணைக் கவரும் அம்சங்களுடன் அட்டகாசமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, ஊட்டியில் ரோஜா மற்றும் மலர் கண்காட்சி, குன்னூரில் பழக்கண்காட்சி மற்றும் கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த கண்காட்சிகளில் மலர் கண்காட்சியே முக்கிய விழாவாக கருதப்படுகிறது.
ஊட்டி மலர் கண்காட்சியை தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா துவக்கி வைத்துள்ளார். இந்த கண்காட்சி இன்று முதல் 10 நாட்கள் களைகட்டும். இதனை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பூங்கா முழுவதும் பொலிவுப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு பல லட்சம் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு 20 அடி உயரத்தில் டிஸ்னி வோர்ல்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

பல ஆயிரம் மலர்களை கொண்டு நீலகிரி மலை ரயில், காளான், ஆக்டோபஸ் உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் பல ஆயிரம் கொய் மலர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பெங்களூர், ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து கார்னேசன் மலர்கள் தருவிக்கப்பட்டு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது தவிர மலர்களை கொண்டு பல்வேறு ரங்கோலியும், மலர் அலங்காரங்கள், மலர் கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளது. மலர்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களின் அனைத்து வகைகளும் இந்தக் காட்சிகளில் வாங்கி மகிழலாம். அத்துடன் 10 நாட்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
அந்த வகையில் இன்று ரோஜா கண்காட்சியில், புறா, யானைகள், புலி, வரையாடு, காட்டுமாடு மற்றும் பல்வேறு விலங்குகளின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மலர் கண்காட்சியை ஒட்டி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டு ரசிக்கவும், மகிழவும் நேற்று முதலே ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.