• Wed. Jun 18th, 2025
[smartslider3 slider="7"]

ஊட்டி மலர் கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு

Byவிஷா

May 20, 2024

ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி நிறைவு பெற இருந்த நிலையில், சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்ததால் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
மலைகளின் ராணியாக கொண்டாடப்படுவது ஊட்டி. நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஊட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்கு விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதும். அதிலும் சீசன் சமயங்களில் கேட்கவே தேவையில்லை. இந்த கூட்டத்தின் காரணமாக ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ஊட்டி செல்பவர்கள் இபாஸ் பெற வேண்டும் எனத் தமிழக அரசு திடீர் உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் கோடை சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக ஊட்டியில் ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி மே 10 ம் தேதி தொடங்கி 10 நாட்கள் வரை நேற்று நிறைவுறுவதாக இருந்தது. இங்கு தோட்டக்கலைத்துறை சார்பில் நடைபெற்ற மலர் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ரோஜா மலர்களைக் கொண்டு யானை, புறா, புலி உள்ளிட்ட விலங்குகளின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதனை குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். இந்நிலையில் இன்றுடன் ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி நிறைவு பெற இருந்த நிலையில், சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்ததால் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பதாக வந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.