• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

சென்னை திரும்பியதும் கனமழை பாதிப்பை ஆய்வு செய்த முதல்வர்

முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்வுகளில் பங்கேற்றார். பின்னர், இரவு சென்னைக்குத் திரும்பிய அவர், ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சி மழை பாதிப்பு கட்டளை மையத்துக்குச் சென்று, நிலவரத்தை ஆய்வுசெய்தார்.

கட்டளை மையத்தில் இருந்த அதிகாரிகள், காணொலி, படங்கள் மூலம் பாதிப்பு நிலைமையை அவரிடம் தெரிவித்தனர்.

அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோரும் உடனிருந்தனர்.

பின்னர், மாநகராட்சி அலுவலகப் பகுதியில் சாலைகளில் மழைநீர் பாதிப்பை நேரில் பார்த்து, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட செய்தியில், “வானிலைக் கணிப்புகளையும் மீறிக் கொட்டித் தீர்க்கிறது மழை. எதிர்பாராத மாமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதோடு, கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

திருச்சியில் இருந்து திரும்பியவுடன், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டளை மையத்திற்கு வந்து, எடுக்கப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளேன். நிலைமை விரைந்து சீர்செய்யப்படும்.

பொதுமக்களும் கவனமுடன் தங்கள் பயணத்தை அமைத்துக் கொள்வதோடு, மழைக்கால வழிகாட்டுதல்களைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

முன்னதாக, பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் இராமச்சந்திரன் சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள அவசரக் கட்டுப்பாட்டு மையத்துக்கு நேற்று இரவு சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் 106 தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ளதுஅதை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் செல்லவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.