• Wed. Mar 29th, 2023

ஓமைடாக் திரைப்பட விமர்சனம்

குழந்தைகளுக்காகவே ஆங்கிலத்தில் படங்கள் தயாரிப்பார்கள் இந்தியாவில் பிற மொழிகளில் குழந்தைகளுக்காக படங்கள் தயாரிக்கின்றார்கள் தெலுங்கில் தயாரித்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட படம்தான் மைடியர் குட்டிச்சாத்தான் அது போன்ற முயற்சிகள் தமிழில் இன்று வரை இல்லை அந்த முயற்சியின் ஆரம்ப புள்ளிதான் ஓமை டாக் திரைப்படம் குழந்தையை கதாநாயகனாக்கி அவரை சுற்றிய திரைக்கதை என்பது தமிழ் சினிமாவுக்கு புதிதுதமிழ்த் சினிமாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறையினர் இணைந்து நடித்துள்ள படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ள முதல் தமிழ் படம் ஓ மை டாக்.

மூத்த நடிகர் விஜயகுமாருடைய மகன் அருண்விஜய், அவருடைய பேரன் அர்ணவ் விஜய் ஆகிய மூன்று தலைமுறையினர் இணைந்து நடித்துள்ளனர்.ஊட்டியில் வசிக்கும் நடுத்தர வர்க்கக் குடும்பம் அருண்விஜய்யுடையது. அப்பா விஜயகுமார், மனைவி மகிமா நம்பியார், மகன் அர்ணவ் ஆகியோரைக் கொண்ட சிறிய குடும்பம்.தங்கள் வசதியை மீறி மகனை உலகத்தரப் பள்ளியில் சேர்த்துப் படிக்கவைப்பதால் கடன் சிக்கல்.அதனால் சின்னச் சின்னச் சங்கடங்கள் எனப் போய்க்கொண்டிருக்கும் அந்தக் குடும்பத்துக்குள் ஒரு நாய்க்குட்டி நுழைகிறது. அதன்பின் நிறைய மாற்றங்கள். அவை என்ன? என்பதைச் சுவாரசியமாகச் சொல்லியிருக்கும் படம்தான் ஓ மை டாக்.விஜயகுமார் பொருத்தமாக நடித்திருக்கிறார் என்பதும் அருண்விஜய் சிறப்பாக நடித்திருக்கிறார் என்பதும் புதிததல்ல. அவர்கள் குடும்பத்திலிருந்து நடிக்க வந்திருக்கும் சிறுவன் அர்ணவ், சிறப்பாக நடித்து அனைவரும் கவர்ந்திருக்கிறார்.

முதல்படம் போல் இல்லாமல் மிகவும் பழகியது போல் எல்லாக்காட்சிகளும் மிக இயல்பாக நடித்திருக்கிறார் அர்ணவ்.குடும்பத்தினரால் அடக்க முடியாத குறும்புகள், பள்ளியில் ஆசிரியர்கள் அறியாமல் செய்யும் சேட்டைகள், நாய்க்குட்டி வந்தவுடன் அதனுடன் ஏற்படும் அன்னியோன்யம், கடைசிக் காட்சியில் வில்லனையும் மனம் மாற வைக்கும் தூய அன்பு ஆகிய எல்லாவற்றிலும் சிறப்பாகச் செய்திருக்கிறார் அர்ணவ். திருஷ்டி சுத்திப் போடுங்க.நடுத்தரக் குடும்பத்தலைவர் வேடத்தில் அச்சுஅசலாகப் பொருந்தியிருக்கிறார் அருண்விஜய், அவருடைய முன்கதை அவருக்குச் சிறப்புச் சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது.
மகிமா நம்பியார் அழகு. சாந்தமான நடிப்பு. மகனை மாமனார் திட்டிவிட்டார் என்பதால் கொதிக்கும் இடம் சிறப்பு.

விஜயகுமாரின் அனுபவ நடிப்பு தலைமுறை இடைவெளியைச் சொல்லும் அவருடைய வேடத்துக்குப் பலம்.
சிம்பா எனும் நாய்க்குட்டி படம் நெடுக வருகிறது. நாமும் தூக்கிக் கொஞ்சலாம் என நினைக்குமளவுக்கு இருக்கிறது.

அர்ணவ்வின் நண்பர்களாக வரும் சிறுவர்களும் அவர்களுடைய துடிப்பான நடிப்பும் படத்துக்குப் பலம்.கோபிநாத்தின் ஒளிப்பதிவு இயற்கை அழகையும் கதையின் தன்மையையும் சரியாக பதிவு செய்திருக்கிறது நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை அளவு.இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்
என்கிற திருக்குறள் சொல்லும் கருத்தை வலியுறுத்தும் மையக்கதையை வைத்துக் கொண்டு, பல பாடங்களை வாழைப்பழத்தில் ஊசி குத்துவது போலச் சொல்லியிருக்கிறார் புது இயக்குநர் சரோவ் சண்முகம். நாய்க்குட்டி, குதிரை ஆகியனவற்றை வைத்து சக உயிரினங்கள் மீது நாம் காட்ட வேண்டிய அன்பையும் அக்கறையையும் சுட்டியிருக்கிறார்.
குழந்தைகள் பெரியவர்கள் ஆகிய அனைவரும் கூடிக் கொண்டாடிப் பார்க்கக் கூடிய படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *