தமிழகத்தில் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கும் நிலையில், அதுகுறித்த அறிவிப்பு செப்டம்பரில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. அதற்கு முன்னதாக பழைய ஓய்வூதிய திட்டம்தான் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அமல்படுத்தப்பட்டிருந்தது. 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு பெரும்பாலான மாநிலங்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி வருகின்றன. சில மாநிலங்களில் அரசு ஊழியர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் ராஜஸ்தான், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் பழைய ஊதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மூன்று முறை ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதும் இதுவரை பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் அதிமுக ஆட்சி முடிந்து, 2021ல் திமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது திமுகவின் 309வது தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்து இருந்தது. அதற்குப் பிறகு கொரோனா நெருக்கடி, மோசமான நிதிநிலை உள்ளிட்டவை காரணமாக பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படவில்லை. ஆட்சி முடிய இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில் ஜனவரி மாதத்திலேயே தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிடும். எனவே, இந்த ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து இருக்கிறது.
கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணப்பலன் பெறுவது, திருமண நிதி உதவி, அரசு ஊழியர்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட ஒன்பது அறிவிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டார். இதற்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் சங்கங்களும் வரவேற்பு தெரிவித்த நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாதது ஏன் என்ற கேள்வி எழுந்தது. மேலும் செப்டம்பர் மாதத்திற்குள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் குதிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அதே நேரத்தில் அரசு ஊழியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய முதல்வர், செப்டம்பர் மாதத்திற்குள் நிச்சயம் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு இருக்கும் என அறிவித்தார். இது குறித்து ஆராய்வதற்கு சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த குழு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கும் மாநிலங்கள் குறித்த ஆய்வு செய்ததோடுஇ அரசு ஊழியர்களிடமும் கருத்துக்களை கேட்டு அறிந்தது.
தற்போது நிதிநிலை குறித்து ஆராயப்பட்டு வரும் நிலையில் செப்டம்பர் மாதத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு உறுதியாக இருக்கும் என்கின்றனர். தற்போது மட்டுமல்ல கடந்த காலங்களிலும் திமுகவின் வெற்றிக்கு அரசு ஊழியர்களின் ஆதரவு முக்கிய காரணியாக இருந்திருக்கிறது. தற்போதும் அரசு ஊழியர்கள் தேர்தலை குறி வைத்தே தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் நிச்சயம் பழைய ஓய்வூதிய திட்டம் செப்டம்பர் மாதத்தில் அமலுக்கு வரும் என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தினர்.
பழைய ஓய்வூதியத் திட்டம் செப்டம்பரில் வெளியாக வாய்ப்பு
