கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி விவகாரத்தில் அந்த மாவட்ட எஸ்.பி மற்றும் மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியூர் என்ற பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து மாணவி ஒருவர் பள்ளியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். இதை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மாணவியின் உடற்கூராய்வு அறிக்கையும் வந்துள்ளது. இதுத்தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், பள்ளியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் பாதுகாப்பை மீறி, ஆயிரக்கணக்கானோர் பள்ளிக்குள் நுழைந்து, பள்ளி வாகனங்களுக்கு தீவைத்து, காவல்துறையினரின் வாகனங்களுக்கும் தீவைத்து, காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். இது கலவரமாக மாறியது. இதனையடுத்து, அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யாக இருந்த செல்வகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதை அடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பகலவனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்ரீதர், சென்னை – கன்னியாகுமரி தொழில்வழித்தட திட்ட இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதை அடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியராக ஷ்ரவண் குமார் ஜடாவத் நியமிக்கப்பட்டுள்ளார்.