

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டி முறையே ஜன.19, 21, 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கப்பட உள்ளது. ஒயிட் பால் கிரிக்கெட் (ஒன்டே, டி.20 போட்டி) அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோகித்சர்மா பயிற்சியின்போது தொடையில் காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வில்லை.
இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்டுள்ள அவர் தற்போது பூர்வாங்க உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இருப்பினும் அணி தேர்வுக்கு 48 மணி நேரத்திற்கு முன் அவர் மேலும் ஒரு உடற்தகுதி தேர்வில் பங்கேற்க வேண்டும். ரோகித் பிட்டாக உள்ளார். அவர் உடல் நலம் தேறி முதற்கட்ட உடற்தகுதியில் தேர்ச்சி பெற்றுள்ளார். தொடர்ந்து அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளார். இன்று அவர் இறுதி சோதனைக்கு உட்படுத்தப்படுவார் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரோகித்சர்மாவை தவிர ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா, அக்சர் பட்டேலும் குணமடைந்து வருகின்றனர். இருப்பினும் அவர்கள் இன்னும் உடற்தகுதியை பெறவில்லை. ஆனால் விரைவில் உடற்தகுதியை அடைவார்கள் என அந்த அதிகாரி கூறினார். தென்ஆப்ரிக்க ஒருநாள் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், இசான் கிஷன், பிரித்வி ஷா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
