• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகை போராட்டம்

Byவிஷா

Apr 24, 2025

சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரி, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதிய சங்கத்தினர் சென்னையில் உள்ள சமூகநல ஆணையரகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 313-ன்படி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச சிறப்பு பென்சன் ரூ.6,750 வழங்க வேண்டும்; உயர்நீதிமன்ற தீர்ப்புப்படி ஓய்வூதியத்தை இரண்டரை மடங்கு உயர்த்தி அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர், சென்னை காமராஜர் சாலையில் உள்ள சமூக நல ஆணையரகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் சங்கத்தின் தலைவர் ந.நாராயணன், பொதுச் செயலாளர் மாயமலை, துணைத்தலைவர் தனபாக்கியம், மாநிலச் செயலர் சுசீலா, பொருளாளர் ஆனந்தவள்ளி உள்பட 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இப்போராட்டம் குறித்து சங்கத்தின் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
“அரசுத் துறையில் உள்ள சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியரின் முதுமை கால வாழ்வாதாரம் கருதி, சமூக பாதுகாப்புத் திட்ட சிறப்பு ஓய்வூதியத்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிமுகம் செய்து வைத்தார். ஆனால், இன்றைய சூழலில் அந்த சிறப்பு ஓய்வூதியமான ரூ.2 ஆயிரம் போதுமானதாக இல்லை. எனவே, ஓய்வூதியத்தை உயர்த்தக்கோரி நீண்ட காலமாக போராடி வருகிறோம்.
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் சத்துணவு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் முறைப்படுத்தப்படும் என திமுக அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்த நிலையிலும், தனது அரசின் கடைசி பட்ஜெட் அறிவிப்பிலும் கூட எங்களது கோரிக்கை குறித்து எந்த அறிவிப்பும் இடம் பெறாதது வேதனைக்குரியது. தனது தேர்தல் வாக்குறுதியை கூட நிறைவேற்றாத தமிழக அரசின் அணுகுமுறையை வன்மையாக கண்டிக்கிறோம்,” என்று அவர்கள் கூறினர்.
இதையடுத்து, அவர்களிடம் சமூக நலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். முன்னதாக, முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க சென்னைக்கு வந்த தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க உறுப்பினர்களை தடுத்து நிறுத்தி, சென்னையில் பல்வேறு இடங்களில் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.