கோட்ஸே ஆதரவாளர் என்று அடையாளப்படுத்தி பாஜக சார்பாக சென்னை மாநகராட்சியில் போட்டியிட்ட உமா ஆனந்தன் இரண்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
சென்னை மாநகராட்சி தேர்தலில் பாஜக தனித்து களமிறங்கியது. சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டலத்தின் 134-வது வார்டில் பாஜக சார்பாக போட்டியிட்டவர் உமா ஆனந்தன்.
இவர் பேசிய பேச்சுகள் பல சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. தீவிர இந்துத்துவா கொள்கை கொண்ட இவர் சாதி ரீதியாக பல மேடைகளில் பேசி இருக்கிறார். இதனால் இந்தப் பகுதியில் பிரபலமானவராக அறியப்பட்டார்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 134-வது வார்டில், மொத்தம் 15 பேர் போட்டியிட்டனர். அதில் மூன்று பேர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 12 பேர் களத்தில் இருந்தனர். அதிமுக சார்பில் அனுராதா பாலாஜியும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுசீலா கோபாலகிருஷ்ணனும் போட்டியிட்டார்கள். பாஜகவில் இருந்து உமா ஆனந்தன் போட்டி இட்டார்.
தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், 134-வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் காங்கிரஸ் வேட்பாளரை விட 2036 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். உமா ஆனந்தன் 5539 வாக்கும், காங்கிரஸ் வேட்பாளர் 3503 வாக்குகளும், அதிமுக 2695 வாக்குகளும் பெற்றுள்ளனர். உமா ஆனந்தன் வெற்றியை அடுத்து, பாஜக சென்னையில் தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
உமா ஆனந்தன் தன்னை ஒரு கோட்ஸே ஆதரவாளர் என்று சொல்லித்தான் பிரசாரம் மேற்கொண்டார். கோட்ஸே குறித்து இவர் அளித்த பேட்டி இணையம் முழுக்க சர்ச்சையானது. கோட்ஸே காந்தியை சுட்டார். ஆம் அது அவரின் நியாயாம். அவர் ஒரு இந்து. இப்பவும் சொல்கிறேன், எனக்கு அது மிகவும் பெருமையாக உள்ளது. கோட்ஸே உமா ஆனந்தன் நான் பெருமையாக சொல்கிறேன். நான் ஒரு கோட்ஸே ஆதரவாளர், என்று உமா ஆனந்த் குறிப்பிட்டு இருந்தார். அதேபோல் பிராமணர்கள் உயர்ந்தவர்கள் என்றும் உமா ஆனந்தன் பேசியது சர்ச்சையானது. இதுவும் சமூகவலைதளத்தில் பெரிய விவாதமாக மாறியது.
உமா ஆனந்த் இப்படி கோட்ஸேவிற்கு ஆதரவாக பேசிய வீடியோ இணையம் முழுக்க பரவி வருகிறது. இவரை எப்படி பாஜக வேட்பாளராக தேர்வு செய்தது. எந்த அடிப்படையில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்று நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பினர். தற்போது உமா ஆனந்தன் வெற்றி பெற்றிருப்பதை பாஜக கொண்டாடி வருகிறது. பெரியார் மண்ணில் கோட்ஸே என்ற அடைமொழியுடன் உமா ஆனந்தனின் வெற்றியை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகிறார்கள்.